தேசிய செய்திகள்

அசாம், பீகாரில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்வு + "||" + Heavy rains in Assam, Bihar, The number of victims rises to 209

அசாம், பீகாரில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்வு

அசாம், பீகாரில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்வு
அசாம் மற்றும் பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்து உள்ளது.
பாட்னா,

அசாமின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் பார்பெட்டா உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆறுகளில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால் இந்த மாவட்டங்கள் தொடர்ந்து நீரில் மூழ்கியே இருக்கின்றன.


இங்கு கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 82 ஆக உயர்ந்தது. இங்கு 1,716 கிராமங்களில் வசித்து வரும் 21.68 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளநீர் வடியாததால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

அசாமில் பாயும் பிரம்மபுத்திரா, தேசாங் உள்ளிட்ட நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அபாய அளவை தாண்டி செல்கிறது. அங்கு மழை, வெள்ள மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இதைப்போல பீகாரிலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள தர்பங்கா உள்ளிட்ட மாவட்டங்கள் மழை, வெள்ளத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பீகாரில் மழை தொடர்பான சம்பவங்களுக்கு இதுவரை 127 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த மாநிலத்திலும் கனமழையால் 13.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தர்பங்கா மாவட்டத்தின் கயாகட் ரெயில்வே பாலத்துக்கு அடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் தர்பங்கா-சமஸ்திப்பூர் பிரிவில் ரெயில் போக்குவரத்தை கிழக்கு மத்திய ரெயில்வே தடை செய்துள்ளது.

பீகாரில் வெள்ள மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதற்காக 2 ஹெலிகாப்டர்களும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளன. அத்துடன் தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 19 குழுவும் பணியில் ஈடுபட்டு உள்ளது.