பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் : பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கொலை வழக்கு


பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் : பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கொலை வழக்கு
x
தினத்தந்தி 29 July 2019 12:17 PM GMT (Updated: 29 July 2019 12:17 PM GMT)

உ.பி.யில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே சிறுமி சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது. ரேபரேலியில் கார் விபத்தில் சிக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார். அவருடன் காரில் சென்ற இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே  என்னுடைய குடும்பத்தையே அழிப்பதற்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார குற்றம் சாட்டிய சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.  சிறுமியின் தாயார் பேசுகையில், “பாலியல் பலாத்கார குற்றவாளி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ளார். தொடர்ந்து எங்களை அச்சுறுத்தி வருகிறார். சிறையில் இருந்து கொண்டே எல்லாவற்றையும் குல்தீப் சிங் செங்கார் இயக்குகிறார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். கார் விபத்து எதார்த்தமாக நடந்தது இல்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது. எங்களுடைய குடும்பத்தையே அழிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்.

 சிறுமியின் சகோதரி பேசுகையிலும், என்னுடைய சகோதரியை கொலை செய்ய மிகப்பெரிய சதி நடத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் கொடுத்த புகாரின் அடிப்படையில்  பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் சிலருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கியது தொடர்பாக உ.பி. மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு தயாராக உள்ளது எனவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

Next Story