மேற்கு வங்காளத்துடன் 4 ஆண்டு கால மோதலுக்கு பிறகு ‘ஒடிசா ரசகுலா’ புவிசார் குறியீடு பெற்றது


மேற்கு வங்காளத்துடன் 4 ஆண்டு கால மோதலுக்கு பிறகு ‘ஒடிசா ரசகுலா’ புவிசார் குறியீடு பெற்றது
x
தினத்தந்தி 29 July 2019 8:33 PM GMT (Updated: 29 July 2019 8:33 PM GMT)

மேற்கு வங்காளத்துடன் 4 ஆண்டு கால மோதலுக்கு பிறகு ‘ஒடிசா ரசகுலா’ புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

புவனேஸ்வர்,

ஒரு உற்பத்தி பொருள், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்கு சொந்தமானது என்பதை அங்கீகரிப்பதற்காக, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. மேற்கு வங்காளத்திலும், ஒடிசா மாநிலத்திலும் ‘ரசகுலா’ இனிப்புவகை மிகவும் பிரபலமானது. தங்கள் மாநிலத்தில்தான் ‘ரசகுலா’ முதன்முதலில் தோன்றியது என்று இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடின. 2015-ம் ஆண்டில் இருந்து இரு மாநிலங்களுக்கும் இடையே இதுதொடர்பாக மோதல் நடந்து வந்தது.

இதற்கிடையே, மேற்கு வங்காளம் முந்திக்கொண்டு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘வங்காள ரசகுல்லா’ என்ற பெயரில் புவிசார் குறியீடு பெற்றது. அதன்பிறகு விழித்துக்கொண்ட ஒடிசா, புவிசார் குறியீடுக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தது.

இந்நிலையில், ஒடிசா மாநில இனிப்புவகைக்கு ‘ஒடிசா ரசகுலா’ என்ற பெயரில் நேற்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு பதிவாளர் அலுவலகம் இதற்கான அதிகாரபூர்வ சான்றிதழை அளித்துள்ளது. இந்த சான்றிதழ், 2028-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதிவரை செல்லும். இந்த அறிவிப்புக்கு ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், அந்த மாநிலத்தை சேர்ந்த பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதருக்கு பல நூற்றாண்டுகளாக ‘ரசகுலா’ படையலாக வைக்கப்பட்டதாக ஒடிசாவின் பழங்கால இலக்கியங்கள் கூறுகின்றன.


Next Story