மத்திய மந்திரியுடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு - கல்விக்கொள்கை தொடர்பான அறிக்கையை அளித்தனர்


மத்திய மந்திரியுடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு - கல்விக்கொள்கை தொடர்பான அறிக்கையை அளித்தனர்
x
தினத்தந்தி 29 July 2019 11:00 PM GMT (Updated: 29 July 2019 10:04 PM GMT)

கல்விக்கொள்கை தொடர்பாக தி.மு.க. குழு தயாரித்த அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று நேரில் அளித்தனர்.

புதுடெல்லி,

தி.மு.க. மக்களவை குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோர் டெல்லியில் நேற்று மாலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார்கள்.

இதுகுறித்து பின்னர் கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் தமிழகத்துக்கு மாறான கருத்துகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையை இன்று மத்திய மந்திரியிடம் அளித்து இருக்கிறோம். புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கையில் இந்துத்துவா கருத்துகளை வலியுறுத்தும் அபாயங்களை காண முடிகிறது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. மதிய உணவு திட்டம் கூட கேள்விக்குறி ஆகக்கூடிய சில ஷரத்துகள் அதில் சொல்லப்பட்டு இருக்கிறது. குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தையும் அதில் காண முடிகிறது. அதனால் தி.மு.க. குழுவின் பரிந்துரைகளைக் கொடுத்து, புதிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற கேட்டோம்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆகஸ்டு 8-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு என்ன கருத்தை முன் வைக்க வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார்.

அறிக்கையை பெற்றுக்கொண்ட மந்திரி, “புதிய வரைவு முன்வைக்கப்பட்ட ஒன்றுதானே தவிர, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உங்களது கருத்துகள் பரிசீலனை செய்யப்படும்” என்று கூறி இருக்கிறார். மேலும் ஆகஸ்டு 1-ந்தேதி தமிழக எம்.பி.க்களை சந்திப்பதாகவும் வாக்குறுதி அளித்து இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story