நதிகள் இணைப்பை கைவிட காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல் - அ.தி.மு.க., தி.மு.க. எதிர்ப்பு


நதிகள் இணைப்பை கைவிட காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல் - அ.தி.மு.க., தி.மு.க. எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 July 2019 10:15 PM GMT (Updated: 30 July 2019 8:44 PM GMT)

சுற்றுச்சூழலுக்கு பேராபத்து என்றும், நதிகள் இணைப்பை கைவிடுமாறும் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தினார். அவருக்கு அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் பேசினார். அவர் பேசியதாவது:-

தண்ணீர் பிரச்சினைக்காக ‘ஜல்சக்தி’ அமைச்சகம் உருவாக்கி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் நதிகள் இணைப்பு திட்டம், பேராபத்தை உண்டாக்கி விடும்.

நதிகளை இணைப்பதால், கடலுக்கு புதிய நீர்வரத்து குறைந்துவிடும். இதனால், இந்தியாவின் பருவமழை முறை ஒருங்கிணைப்பு பெரிதும் பாதிக்கப்படும். பெருமளவிலான நிலம் தண்ணீரில் மூழ்கி விடும். அதன்காரணமாக, லட்சக்கணக்கானோர் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

நமது நாடு, பருவமழையை சார்ந்திருப்பதால், பெரும்பாலும் எல்லா நதிகளிலும் ஒரே காலகட்டத்தில்தான் அதிக தண்ணீர் ஓடும். இந்தியாவின் இட அமைப்பையும், நதிகளை இணைக்க திட்டமிட்டுள்ள வழிமுறையையும் பார்த்தால், நாட்டின் வறண்ட பகுதிகளான மத்திய மற்றும் மேற்கு இந்தியாவை புறக்கணித்து விட்டுத்தான் நதிநீர் செல்லக்கூடிய நிலை இருக்கும்.

ஏனென்றால், அந்த பகுதிகள், கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் ஆயிரம் மீட்டர்வரை உயரத்தில் அமைந்துள்ளன. இப்படி புறக்கணித்து செல்வதால், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

மேலும், நதிகள் இணைப்பு திட்டத்துக்கான செலவு, குறைத்து மதிப்பிடப்படுகிறது. உயிரினங்களின் வாழ்க்கை சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை யாரும் ஆய்வு செய்யவே இல்லை. நதிகள் என்பவை தனித்த சூழலியல் கொண்ட உயிரினங்கள் போன்றவை. அவற்றை அதன் போக்கிலேயே நடத்த வேண்டும்.

தண்ணீர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்ற எண்ணற்ற நிபுணர்கள், நதிகள் இணைப்பால் ஏற்பட உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூகவியல் பேராபத்துகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

ஆகவே, நதிகள் இணைப்பு திட்டத்தை ஜல்சக்தி அமைச்சகம் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு பதிலாக தண்ணீர் மேலாண்மை, தண்ணீரை திறம்பட பயன்படுத்துவது, தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றில் உடனடி கவனம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.

அவரது கருத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவர்களை சமாதானப்படுத்தினார். அவர் கூறியதாவது:-

நீங்கள் உங்கள் கருத்தை தெரிவித்து விட்டீர்கள். அதோடு விடுங்கள். ஜெய்ராம் ரமேஷ் தனது கருத்தை தெரிவிக்க எல்லா உரிமையும் உண்டு. ஆனால், இது இப்போது நாட்டின் கருத்தல்ல என்பதை நான் அவருக்கு சொல்லிக்கொள்கிறேன். அதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் யோசனைகளை மாநில அரசுகளிடம் சொல்லுங்கள். அவர்கள் பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story