கற்பழிப்பு புகாரில் கைதான பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்குவது ஏன்? - பிரியங்கா கேள்வி


கற்பழிப்பு புகாரில் கைதான பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்குவது ஏன்? - பிரியங்கா கேள்வி
x
தினத்தந்தி 30 July 2019 11:15 PM GMT (Updated: 30 July 2019 9:15 PM GMT)

பாதிக்கப்பட்டவர்களை கைவிட்டுவிட்டு, கற்பழிப்பு புகாரில் கைதான பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்குவது ஏன் என்று பிரியங்கா கேள்வி விடுத்தார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மீது அப்பெண்ணின் தாயார் குற்றம் சாட்டியதையடுத்து, எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் ஜெயிலில் இருக்கிறார்.

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த பெண்ணும், அவருடைய உறவினர்களும் ரேபரேலியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர் மகேஷ் சிங் என்பவரை பார்க்க காரில் போய்க் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சரக்கு லாரி மோதியதில், பெண்ணும், வக்கீலும் படுகாயம் அடைந்தனர். 2 உறவுக்கார பெண்கள் பலியானார்கள்.

இது திட்டமிட்ட கொலை முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரபிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணும், வக்கீலும் லக்னோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த ஆஸ்பத்திரி முன்பு அவருடைய உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 உறவுக்கார பெண்களின் இறுதிச்சடங்குக்காக ரேபரேலி சிறையில் உள்ள மகேஷ் சிங்கை பரோலில் விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்றும் இந்த சம்பவத்தை கண்டித்து டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டார்.

அதில், “குல்தீப்சிங் செங்கார் எம்.எல்.ஏ. போன்றவர்களுக்கு அரசியல் அதிகார பாதுகாப்பு கொடுத்து விட்டு, பாதிக்கப்பட்டவர்களை தனியாக உயிருக்கு போராடுமாறு ஏன் கைவிடுகிறோம்? அந்த குடும்பம் அச்சுறுத்தப்பட்டதாகவும், அச்சத்தில் இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. அது, திட்டமிட்ட விபத்தாக இருக்க வாய்ப்புள்ளதாக கூட குறிப்பிடப்பட்டுள்ளது” என்று பிரியங்கா கூறியுள்ளார்.

லக்னோ ஆஸ்பத்திரியில், அந்த பெண்ணின் உறவினர்களை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்தார். விபத்துக்கு மாநில அரசே முழு பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார்.

உத்தரபிரதேச சட்டசபை காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு தலைமையில் காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.வை பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் சந்தித்து பேசியுள்ளார். ஆளும் பா.ஜனதாவின் ஆதரவு, எம்.எல்.ஏ.வுக்கு தொடர்ந்து கிடைத்து வருவதை இது நிரூபிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் நேற்றும் இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. மக்களவை கூடியவுடன், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, “சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. எனவே, இதை அரசியல் ஆக்கக்கூடாது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உ.பி. அரசு பாரபட்சமின்றி விசாரணை நடத்தி வருகிறது” என்று கூறினார்.

பெண்ணின் கார் மீது மோதிய சரக்கு லாரி, ஒரு சமாஜ்வாடி தலைவருக்கு சொந்தமானது என்று பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் கூறினார்.

உடனே, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, தி.மு.க. போன்றவற்றின் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியபடியே சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பேச எழுந்தபோது, கூச்சலிட்டு அமர வைத்தனர்.

அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, “மாநில விவகாரங்களை இங்கு விவாதிக்கக்கூடாது” என்று கூறினார். அதையடுத்து, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


Next Story