மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது: ஆதரவு - 99, எதிர்ப்பு - 84


மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது: ஆதரவு - 99, எதிர்ப்பு - 84
x
தினத்தந்தி 31 July 2019 12:15 AM GMT (Updated: 30 July 2019 9:51 PM GMT)

மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

புதுடெல்லி,

திருமணமான முஸ்லிம் ஆண், மனைவியை 3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்து வந்தது.

ஆனால் இது தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, இந்த நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த 2017-ம் ஆண்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், நாடாளுமன்றம் சட்டம் இயற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ‘முத்தலாக்’ நடைமுறையை தடை செய்து ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் மத்திய அரசு மசோதா இயற்றியது.

இந்த மசோதாவை 2017, 2018 என இரு முறை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் பாரதீய ஜனதா கூட்டணிக்கு போதிய பலம் இல்லாத காலத்தால், இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த பாரதீய ஜனதா கூட்டணி அரசு இந்த முறை, ‘முத்தலாக்’ தடை மசோதாவை, முதல் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி விட வேண்டும் என்று தீவிரம் காட்டியது.

இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 25-ந் தேதி மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 302 பேர் வாக்களித்தனர். எதிராக 78 ஓட்டுகளே விழுந்தன.

இந்த நிலையில், ‘முத்தலாக்’ தடை மசோதாவை மாநிலங்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று அறிமுகம் செய்தபோது, “இந்த நாள் வரலாற்று சிறப்புக்குரிய நாள்“ என்றதும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “இந்த நாள் வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய நாள்” என்றார்.

சபைத்தலைவர் வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, “மூத்த உறுப்பினர் வைகோ பொறுமை காக்க வேண்டும்” என்று கூறிய பின்னர், ரவிசங்கர் பிரசாத் தொடர்ந்து பேசினார். அப்போது அவர், “இந்த மசோதாவை அரசியல் சாயம் பூசிக்கொண்டோ, ஓட்டு வங்கி அரசியல் பார்வையிலோ யாரும் பார்க்காதீர்கள். இது பெண்களுக்கு நீதி, கண்ணியம், அதிகாரம் வழங்குவதற்கானது” என குறிப்பிட்டார்.

இந்த மசோதாவில், தடையை மீறி ‘முத்தலாக்’ நடைமுறையை பின்பற்றும் ஆணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்திருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி. அமீ யாஜ்னிக் பேசியபோது, “இந்த மசோதா, பெண்களின் நிலைமையை ஆராயாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதாவில் தடையை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறி இருப்பது ஆபத்தானது. கணவர்களை சிறையில் தள்ளிவிட்டால், பெண்கள் எப்படி வாழ முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

“பெண் தாயாக, சகோதரியாக, மகளாக இயங்குகிறாள். எல்லா பெண்களுக்கும் அதிகாரம் வழங்குங்கள். அவர்களுக்கு பொருளாதார அதிகாரம், சமூக அதிகாரம் அளித்து, தலை நிமிர்ந்து நடக்கச்செய்யுங்கள். இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன். ஆனால் தடையை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற அம்சத்தை எதிர்க்கிறேன்” என குறிப்பிட்டார்.

இந்த மசோதாவை பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் எதிர்த்து, வெளிநடப்பு செய்தது.

விவாதத்தின்போது மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி குறுக்கிட்டு, “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்றி நாங்கள் ஒரு மசோதா கொண்டு வந்தால், அது சட்டத்தை அமல்படுத்துவதற்கும், திறம்பட செயல் படுத்துவதற்கும்தான்” என்றார்.

“இன்று நாம் ஒரு தவறு செய்தால், அதற்கு ஒரு தலைமுறையே விலை கொடுக்க வேண்டியது வரும்” என எச்சரித்த அவர், “இந்த மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியாக வேண்டும்” என ஓங்கிக்குரல் கொடுத்தார்.

மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்), “சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த அரசு விரும்புகிறது. இந்த மசோதா, பெண்களுக்கு பாதுகாப்பு தர அல்ல; சிறைகளை நிரப்புவதற்குத்தான்” என ஆவேசமாக கூறினார்.

“இது அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றும் சாடினார்.

தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவாவும், மசோதாவுக்கு பின்னால் முறைமுக செயல்திட்டம் இருப்பதாக சாடினார்.

பிரசன்ன ஆச்சாரியா (பிஜூ ஜனதாதளம்), சஞ்சய் ராவுத் (சிவசேனா), விஜயசாய் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி), சரோஜ்பாண்டே (பா.ஜனதா), டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.) உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

அ.தி.மு.க. எம்.பி. நவநீத கிருஷ்ணன் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினார். மேலும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களவையில் மசோதாவை ஆதரித்து ஓட்டு போட்ட அ.தி.மு.க., மாநிலங்களவையில் மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.

4 மணி நேரத்துக்கு மேலாக நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசினார்.

அப்போது அவர் வரதட்சணை தடைச்சட்டம், இந்துக்கள் பலதார மணம் செய்தல் போன்றவற்றுக்கும் சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகள் இருப்பதை சுட்டிக் காட்டி, ‘முத்தலாக்’ தடைச்சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை விதிக்க வகை செய்திருப்பதை நியாயப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. அதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 84 பேரும், எதிராக 100 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் எதிராக வாக்களித்ததால் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அது பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு முதல் வெற்றியாக அமைந்தது.

அடுத்து மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது.

இந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 84 உறுப்பினர்களும் வாக்களித்தனர். கூடுதல் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அது எளிதாக நிறைவேறியது.

ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் புறக்கணித்தது. காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் சபைக்கு வரவில்லை. இதெல்லாம், மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு பக்க பலமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறி இருப்பது ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு கிடைத்துள்ள வெற்றியாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விட்ட ‘முத்தலாக்’ தடை மசோதா இனி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் கையெழுத்து போட்டதும் அது சட்டமாகி விடும். உடனே மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியிடும். அதைத் தொடர்ந்து ‘முத்தலாக்’ தடைச்சட்டம் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

தடையை மீறி முஸ்லிம் ஆண் ஒருவர் ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்தால், அவர் 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியது நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story