தேசிய செய்திகள்

மராட்டியம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- பா.ஜனதாவில் இன்று சேர உள்ளதாக தகவல் + "||" + Desertion by Opposition MLAs in Maharashtra continues as 4 Congress and NCP legislators resign, likely to join BJP today

மராட்டியம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- பா.ஜனதாவில் இன்று சேர உள்ளதாக தகவல்

மராட்டியம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- பா.ஜனதாவில் இன்று  சேர உள்ளதாக தகவல்
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று பா.ஜனதாவில் சேருகிறார்கள்.
மும்பை,

மராட்டியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் மராட்டிய சட்ட சபைக்கு வருகிற அக்டோபர் மாத வாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டதை தொடர்ந்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் ஐக்கியமாகி வருகிறார்கள். குறிப்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காங்கிரசை சேர்ந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கடந்த மாதம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். பா.ஜனதா கூட்டணி அரசில் அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த பீட் தொகுதி எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகர், சகாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பண்டுரங் வரோரா ஆகியோரும் சமீபத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு சிவசேனாவில் இணைந்தனர்.மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்தார்.தேர்தல் நேரத்தில் இந்த கட்சி தாவல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு தலைவலியை கொடுத்து வரும் நிலையில், அந்த கட்சிகளை சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பா.ஜனதா மந்திரி கிரிஷ் மகாஜன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மும்பை வடலா தொகுதி எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைபவ் பிச்சாத் (அகோலா தொகுதி), சிவேந்திர ராஜே போசலே (சத்தாரா), சந்தீப் நாயக் (ஐரோலி) ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் சபாநாயகர் ஹரிபாவு பாகடேவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இதில், காளிதாஸ் கோலம்கர் மும்பையில் இருந்து 7 தடவை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்

பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் பா.ஜனதாவில் சேருகிறார்கள். அவர்கள் இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மராட்டிய பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது.

மராட்டியத்தில், கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் ஒரு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொடர் தோல்வியை கண்டு உள்ளன. அதே நேரத்தில் பா.ஜனதா, சிவசேனா தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களது எதிர்காலம் கருதி பா.ஜனதா அல்லது சிவசேனாவுக்கு தாவி வருவதாக கூறப்படுகிறது.