மராட்டியத்தில் சாலையோர வடிகாலில் கிடந்த முதலை!


மராட்டியத்தில் சாலையோர வடிகாலில் கிடந்த முதலை!
x
தினத்தந்தி 31 July 2019 8:33 AM GMT (Updated: 31 July 2019 8:33 AM GMT)

மராட்டியத்தில் சாலையோர வடிகாலில் 8 அடி நீள முதலை கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. மராட்டியத்தின் கடற்கரை மாவட்டங்களில் ஒன்றான ரத்னகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. தற்போது மழை குறைந்து வெள்ள நீர் வடிந்ததால் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. 

இந்த சூழலில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லன் தாதர் பகுதியில் உள்ள  சாலையோர வடிகாலில் 8 அடி நீள முதலை ஒன்று கிடந்தது உள்ளூர்வாசிகளை பீதியில் ஆழ்த்தியது. வடிகாலில் முதலை கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.  

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இந்த நிகழ்வு நடைபெற்றதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.  வஷித்ரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நகரின் வெள்ளநீர் வடிகால் மூலமாக இப்பகுதிக்கு முதலை அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  முதலை மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story