இந்தியாவில் தொழிலதிபர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் -மம்தா பானர்ஜி சாடல்


இந்தியாவில் தொழிலதிபர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் -மம்தா பானர்ஜி சாடல்
x
தினத்தந்தி 31 July 2019 1:51 PM GMT (Updated: 31 July 2019 1:51 PM GMT)

இந்தியாவில் பல்வேறு விசாரணை முகமைகளால் தொழிலதிபர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல ‘காபி டே’ ஓட்டல் அதிபருமான சித்தார்த் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கிடையே தொழில் அதிபர் சித்தார்த் எழுதியதாக சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் வைரலாகியது. அதில், 37 வருட கடின உழைப்புக்கு பிறகு எனது நிறுவனத்தில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி  கொடுத்துள்ளேன். தொழில்நுட்ப நிறுவனங்களில் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆனாலும் எனது தொழிலை லாபநோக்கத்தில் கொண்டுசெல்வதில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். இதற்காக என் மேல் நம்பிக்கை வைத்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதிகளவில் கடன் வாங்கி இருந்தேன். கடன் கொடுத்தவர்கள் எனக்கு தொல்லை கொடுத்தனர். வருமான வரித்துறையினர் எனக்கு தொந்தரவு கொடுத்தனர். முன்னாள் டி.ஜி.பி எனது சொத்துக்களை முடக்கினார். இதனால் எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. எனக்கு பின்னர் நான் விட்டுச்செல்லும் தொழிலை வெற்றிகரமாக நடத்துங்கள். எல்லா தவறுக்கும் நான் ஒருவன் தான் காரணம். என்னுடைய ஆடிட்டர், மூத்த அதிகாரிகள் நான் செய்த பணபரிவர்த்தனை பற்றி அறிந்து கொள்ளவில்லை. யாரையும் ஏமாற்ற வேண்டும், தவறான பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை என்று அதில் கூறப்பட்டு இருந்தது. 

ஆனால் காபி டே அதிபர் சித்தார்த் மீது சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என வருமான வரித்துறை விளக்கம் அளித்தது. 

சித்தார்த் மரணத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் பல்வேறு விசாரணை முகமைகளால் தொழிலதிபர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என சாடியுள்ளார்.  காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்  மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல்வேறு முகமைகளின் நெருக்கடியால் அவர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்ததாக தெரிகிறது. தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக பல்வேறு வட்டார தகவல்களில் இருந்து  கேள்விப்படுகிறேன். சிலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இன்னும் சிலர் வெளியேறி வருகின்றனர். இதுபோல தான் எதிர்க்கட்சிகளும் குதிரைபேரம், நெருக்கடி, அரசியல் பழிவாங்குதலால் சிக்கலை சந்தித்து வருகின்றன என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Next Story