சித்தார்த் தற்கொலை, மக்களவையில் எதிரொலித்தது - விசாரணை கேட்கிறது காங்கிரஸ்


சித்தார்த் தற்கொலை, மக்களவையில் எதிரொலித்தது - விசாரணை கேட்கிறது காங்கிரஸ்
x
தினத்தந்தி 31 July 2019 10:45 PM GMT (Updated: 31 July 2019 9:17 PM GMT)

சித்தார்த் தற்கொலை விவகாரம், நாடாளுமன்ற மக்களவையில் எதிரொலித்தது. இதில் காங்கிரஸ் கட்சி விசாரணை கோருகிறது.

புதுடெல்லி,

‘கபே காபி டே’ அதிபர் சித்தார்த்தின் தற்கொலை மரணம், நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்ற மக்களவையிலும் நேற்று எதிரொலிக்க தவறவில்லை.

இந்த பிரச்சினையை கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி எழுப்பினார். “சித்தார்த்தின் தற்கொலைக்கு வருமான வரித்துறை அதிகாரிகளும் ஒரு காரணம் என தெரிய வந்திருக்கிறது. இது ஒரு முக்கிய பிரச்சினை, உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்” என கூறினார்.

அவர் சித்தார்த் எழுதியதாக கூறப்படுகிற கடிதத்தில் எழுதப்பட்டிருந்த தகவல்களை சுட்டிக்காட்ட முயற்சித்தார். ஆனால் அதை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை.

அவர் மணிஷ் திவாரியிடம், “ கடிதத்தின் நம்பகத்தன்மை ஆராயப்படுகிறபோது, அந்த கடிதத்தை குறிப்பிடுவதோ அல்லது அதன் உள்ளடக்கத்தை எழுப்புவதோ சரிதானா?” என்று கேட்டார்.

அதற்கு மணிஷ் திவாரி, “தற்கொலை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும் என்கிறபோது, வருமான வரித்துறை மற்றும் அதன் அதிகாரிகள் பற்றிய விவகாரமும் முக்கிய பிரச்சினைதான்” என பதில் அளித்தார்.

சித்தார்த் தற்கொலை பிரச்சினை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டார்.

அவர் அதில், “கபே காபி டே அதிபர் சித்தார்த் சாவு தொடர்பான நிகழ்வுகள், என்னை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இது மிகவும் துயரமானது; துரதிர்ஷ்டவசமானதும் ஆகும். அவர் பல்வேறு அரசு அமைப்புகளிடம் இருந்து வந்த அழுத்தங்களால்தான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்; அமைதியாக தனது தொழிலை நடத்த முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார் என்பது அவர் எழுதி உள்ள கடிதத்தில் இருந்து தெரிய வந்துள்ளது” என கூறி உள்ளார்.

மேலும், “ தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர் என்று எனக்கு பல்வேறு வட்டாரங்களில் இருந்து வந்துள்ள தகவல்கள் கூறுகின்றன. சிலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். இன்னும் சிலர் வெளியேறும் மனநிலையில் உள்ளனர்” எனவும் கூறி உள்ளார்.

சித்தார்த்தின் தற்கொலை தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா விசாரணை கேட்கிறார். இதையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சித்தார்த்தின் மரணம் கவலைக்குரியது, மர்மமானது. இந்த துன்பகரமான வழியில் அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்த காரணங்கள், கண்ணுக்கு தெரியாத கைகள் தொடர்பாக பாரபட்சமற்ற, நியாயமான விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story