தேசிய செய்திகள்

கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட் + "||" + In the case of Coimbatore girl murder case Confirmed the death penalty for the offender Supreme Court

கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
கோவையை சேர்ந்த பள்ளி சிறுமி உள்பட 2 பேரை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
புதுடெல்லி,

கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ஒருவரின் 10 வயது மகள், 7 வயது மகன் ஆகியோர் 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது கார் டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரால் கடத்தி கொல்லப்பட்டனர். சிறுமியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.


இந்த இரட்டை கொலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகன்ராஜ் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது நடைபெற்ற என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இரட்டைத் தூக்கு மற்றும் 3 ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனோகரன் சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

2014-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பு அதே அமர்வில் வழங்கப்பட்டது. நீதிபதிகள், நாங்கள் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று ஒரே வார்த்தையில் தீர்ப்பு வழங்கினார்கள்.