அயோத்தி நில வழக்கு: மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்ற வழக்கில் மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அதேசமயம், அயோத்தி வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இந்த குழுவில் ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்று இருந்தனர்.
இந்த குழு ஏற்கனவே கடந்த மே மாதம் தங்களது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மத்தியஸ்த குழுவுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்த நடவடிக்கையை முடித்து இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அயோத்தி நில விவகாரம் வெள்ளியன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
Related Tags :
Next Story