மாநிலங்களவையில் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் நிறைவேறியது


மாநிலங்களவையில் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் நிறைவேறியது
x
தினத்தந்தி 2 Aug 2019 9:40 PM GMT (Updated: 2 Aug 2019 9:40 PM GMT)

மாநிலங்களவையில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் சட்டம் நிறைவேறியது.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் சட்டம் நிறைவேறியது. இதன்மூலம் 50 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய மந்திரி தெரிவித்தார்.

மத்திய அரசு குறைந்தபட்ச ஊதிய சட்டம், போனஸ் சட்டம், சம ஊதிய சட்டம் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் சட்டங்களை ஒருங்கிணைத்து சம்பளங்கள் சட்டத்தை இயற்றியது. இந்த சட்டமசோதா மக்களவையில் கடந்த 30-ந்தேதி நிறைவேறியது. இதைத்தொடர்ந்து இந்த சட்டமசோதாவை தொழிலாளர் துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசியதாவது:-

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம். இதன்மூலம் நாட்டில் உள்ள 50 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு தொழிலாளருக்கும் மரியாதைக்குரிய வாழ்க்கை கிடைக்கும். ஏற்கனவே நிலைக்குழு தெரிவித்த 24 பரிந்துரைகளில் 17 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசு மாநிலங்களின் உரிமையை எடுத்துக்கொள்ளாது. இந்த சட்டத்தின்படி தொழிற்சங்கங்கள், வேலை வழங்குவோர், மாநில அரசு ஆகிய முத்தரப்பு குழு சம்பளத்தை நிர்ணயம் செய்யும். இந்த சம்பளம் மாநில அரசுகளின் விருப்பப்படி 2 அல்லது 3 வருடங்களுக்கு (அதிகபட்சம் 5 ஆண்டுகள்) ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், சம்பளம் வழங்க தாமதிப்பது போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவாதத்தில் பல்வேறு கட்சி எம்.பி.க்களும் பேசினார்கள். காங்கிரஸ் எம்.பி. மதுசூதன் மிஸ்திரி பேசும்போது, “முந்தைய அரசும் சரி, இந்த அரசும் சரி பல ஆண்டுகளாக நியாயமான சம்பளம் என பேசாமல் குறைந்தபட்ச சம்பளம் என பேசுவது துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

விவாதத்துக்கு பின்னர் 85 உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டமசோதா நிறைவேறியது. 8 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.


Next Story