மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி


மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி
x
தினத்தந்தி 3 Aug 2019 10:29 AM GMT (Updated: 3 Aug 2019 10:29 AM GMT)

காஷ்மீருக்குள் ஊடுருவ ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் தயாராகவுள்ளனர்.

ஜம்மு,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து பாகிஸ்தானின் பாலகோட் நகரில் அமைந்த பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க முகாம்களின் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.  இதில் இப்ராகிம் அசார் மற்றும் முப்தி அசார் கான் காஷ்மீரி ஆகிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இதில், இப்ராகிம் அசார் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் ஆவான்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.  அமர்நாத் யாத்திரையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. சட்டப்பிரிவு ரத்து, மாநிலம் பிரிக்கப்பட இருக்கிறது என பல்வேறு யூகங்கள் கிளம்பின.  ஆனால், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இதனை மறுத்துள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் இப்ராகிம் அசார் உள்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என ரகசிய தகவல் கிடைத்தது.  தீவிரவாத பயிற்சி பெற்ற அவர்கள் மர்காஸ், சனான் பின் சல்மா, தர்னப், பெஷாவர், கைபர் பக்டுன்க்வா ஆகிய பகுதிகளில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க முகாம்களுக்கு வந்தடைந்து உள்ளனர்.

இவர்கள் பாகிஸ்தானின் கைபர் பக்டுன்க்வாவில் ஜம்ருத் பகுதியில் உள்ள பயங்கரவாத இயக்க முகாம்களில் அஸ்காரி பயிற்சியை எடுத்து முடித்துள்ளனர்.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் இப்ராகிம் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டான் என கூறப்பட்ட நிலையில் அவன் உள்பட 15 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ தயாராகவுள்ளனர் என்று வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story