காஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றன -ஆளுநர் எஸ்.பி.மாலிக்
காஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றன என்று அம்மாநில ஆளுநர் எஸ்.பி.மாலிக் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் அசார் உள்ளிட்ட 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜம்மு காஷ்மீர் ஆளுநர் எஸ்.பி.மாலிக் கூறியதாவது:-
காஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றன. நாளை என்ன நடக்கும் என எனக்கு தெரியாது, அது என் கைகளில் இல்லை, இன்றுவரை கவலைப்பட எதுவும் இல்லை.
யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களது கடமையாகும். எல்லையில் ஏராளமான பயங்கரவாதிகள், தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
எந்தவொரு அசம்பாவிதம் நடந்தாலும் அது நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும், அதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க விரும்பினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story