திடீரென்று படைகள் குவிக்கப்பட்டதால் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம்


திடீரென்று படைகள் குவிக்கப்பட்டதால் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம்
x
தினத்தந்தி 4 Aug 2019 12:15 AM GMT (Updated: 3 Aug 2019 10:33 PM GMT)

காஷ்மீரில் திடீரென்று படைகள் குவிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள், அமர்நாத் பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் ஏ.டி.எம். மையங்களிலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

ஸ்ரீநகர்,

இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

நமது நாட்டிலேயே அதிக அளவில் முஸ்லிம்களை கொண்டுள்ள இந்த மாநிலத்துக்கென்று இந்திய அரசியல் சாசனம் சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது.

இந்த சிறப்பு அந்தஸ்தையும், சலுகைகளையும் வழங்கியுள்ள இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்யப்போவதாக முதலில் தகவல்கள் பரவின.

அந்த மாநிலத்தில் ஏற்கனவே 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் களப்பணியில் உள்ளனர். அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கென சுமார் 20 ஆயிரம் வீரர்கள் அமர்த்தப்பட்டனர். பாதுகாப்பு மேம்பாடு என்ற பெயரில் 10 ஆயிரம் வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

ஆக, இதுவரை இல்லாத வகையில் 90 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

எங்கு பார்த்தாலும் பாதுகாப்பு படையினர் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் இடையே இனம்புரியாத பதற்றம் காணப்படுகிறது.

காஷ்மீரில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள குகைக்கோவிலில் பனிலிங்கத்தை தரிசிக்க மேற்கொள்ளப் படுகிற அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.

இந்த நிலையில்தான், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

அத்துடன், அமர்நாத் புனித பயண பாதையில், குறிபார்த்து சுடுவதில் வல்லமை படைத்த அமெரிக்க ‘ஸ்னைப்பர் எம்- 24’ ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக்குவியல்களை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்து உள்ளனர். சிக்கியுள்ள ஆயுதங்களில் பாகிஸ்தான் ராணுவ தளவாட தொழிற்சாலையின் முத்திரை உள்ளது என ராணுவ துணைத்தளபதி தில்லான் வெளியிட்ட தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த ஆயுதக்குவியல்கள், அமர்நாத் புனித பயணிகளை தாக்கும் நோக்கத்துடன்தான் குவிக்கப்பட்டுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்துதான், இந்த மாதம் 15-ந் தேதி நிறைவு அடைய இருந்த அமர்நாத் யாத்திரையை உடனே முடித்துக்கொண்டு, புனித பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தியது.

இதன் காரணமாக சுமார் 22 ஆயிரம் புனித பயணிகள், அவசர அவசரமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து நேற்று ஊர்களுக்கு புறப்பட்டனர். பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பயணிகளை மீட்பதற்காக விமானப்படை விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. சிறப்பு பஸ் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

காஷ்மீரில் 43 நாட்கள் நடக்கிற மசில் மாதா யாத்திரையும் பாதுகாப்பு காரணங்களையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டார் பள்ளத்தாக்கு பகுதியில் மசில் கிராமத்தில் அமைந்துள்ள துர்காவை வழிபடுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து இங்கு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த புனித பயணமும் திடீரென ரத்தாகி உள்ளதால் பக்தர்கள் அவசரமாக ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் புனித பயணிகளை வெளியேற்ற இந்திய விமானப்படையின் விமானங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த பதற்றமான சூழ்நிலையில், ஸ்ரீநகர் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கத்தொடங்கி உள்ளனர். பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நின்றனர்.

இருப்பினும், அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கத் தேவையில்லை, பெட்ரோல், டீசல் ஒரு மாத காலத்துக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது என ஸ்ரீநகர் கலெக்டர் சாகித் சவுத்ரி அறிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரி (என்.ஐ.டி.) வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் யாருக்கும் விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெறாமல் யாரும் வெளியேறவும் தடை போடப்பட்டுள்ளது. காஷ்மீர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து ஜம்மு தனி மாநிலமும், காஷ்மீர், லடாக் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது பற்றிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று வெளியிட உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

காஷ்மீரில் என்ன நடக்கிறது, எதற்காக இதுவெல்லாம் நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கை முன்னாள் முதல்- மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்று நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து உமர் அப்துல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை ரத்து செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை. இதே போன்று மாநிலத்தை மூன்றாக பிரிக்கவும் எந்த யோசனையும் இல்லை என்று கவர்னர் உறுதி அளித்தார். ஆனால் காஷ்மீரைப் பொறுத்தமட்டில் கவர்னர் வார்த்தைகள் இறுதியானவை அல்ல. திங்கட்கிழமை இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என கூறினார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கினால், அதை எதிர்த்து அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதே போன்று மற்றொரு முன்னாள் முதல்-மந்திரியான மெகபூபா, மக்கள் இயக்க தலைவர் ஷா பாசல், மக்கள் மாநாடு தலைவர் சாஜத் லோனே உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

உமர் அப்துல்லா சந்திப்பை தொடர்ந்து, கவர்னர் சத்யபால் மாலிக் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர், “காஷ்மீர் குறித்த அரசியல் சாசன விதிகளில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவது தொடர்பாக தகவல் எதுவும் வரவில்லை. பாதுகாப்பு காரணங்களையொட்டித்தான் படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளன” என தெளிவுபடுத்தி உள்ளார்.

இருப்பினும் நாளை நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story