வெள்ளை கொடி ஏந்தி வந்து உடல்களை எடுத்துச் செல்லுங்கள் - பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் அழைப்பு


வெள்ளை கொடி ஏந்தி வந்து உடல்களை எடுத்துச் செல்லுங்கள் - பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் அழைப்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 10:36 AM IST (Updated: 5 Aug 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கொல்லப்பட்ட 7 பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை, வெள்ளை கொடி ஏந்தி வந்து எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் சிறப்பு படையினர் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெள்ளை கொடி ஏந்தி வந்து அவர்களது உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

காஷ்மீரில் ஊடுருவி நாசவேலை புரிவதற்காக, எல்லை நடவடிக்கை குழு (பேட்) என்ற தனிப்பிரிவை பாகிஸ்தான் ராணுவம் வைத்துள்ளது. இதில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப்படையினரும், பயங்கரவாதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா எல்லைப்புற மாகாணம் கெரான் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக, ‘பேட்’ குழுவைச் சேர்ந்தவர்கள் சிலர் ஊடுருவ முயன்றனர். சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவ வீரர்கள், அவர்களை துணிச்சலாக எதிர்கொண்டனர்.

இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், ‘பேட்’ குழுவை சேர்ந்த 5 பேர் முதல் 7 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே, கொல்லப்பட்ட பாகிஸ்தான் குழுவினரின் உடல்களை இறுதிச்சடங்குக்காக ஒப்படைக்க இந்திய ராணுவம் முன்வந்துள்ளது. இதற்காக, வெள்ளைக்கொடி ஏந்தி வந்து இந்திய ராணுவத்தை அணுகி, உடல்களை எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தான் ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

‘பேட்’ குழுவினரின் உடல்கள், கெரான் பகுதியில் இந்திய புறக்காவல் நிலையம் அருகே கிடப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா கூறியதாவது:-

இந்திய ராணுவத்தின் அழைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் இதுவரை பதில் அளிக்கவில்லை. மேலும், பனிப்பொழிவுக்காக பாதையை மூடுவதற்கு முன்பு, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ பயிற்சி பெற்ற ஏராளமான பயங்கரவாதிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும், அவர்களின் முயற்சிகளை ராணுவம் முறியடிக்கும்.

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கவும், அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அமர்நாத் யாத்திரை பாதையில் ஏராளமான ஆயுதங்கள், பாகிஸ்தான் குறியீடு பதிக்கப்பட்ட கண்ணிவெடி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பயங்கரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தலையீடு நிரூபணமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story