உன்னோவ் பலாத்காரம் மற்றும் விபத்து வழக்கு: லாரி ஓட்டுனர் புதிய தகவல்
உன்னோவ் பலாத்காரம் மற்றும் விபத்து வழக்கில் சிபிஐ அதிகாரிகளிடம் மழை காரணமாக லாரியின் டயர்கள் சறுக்கியது என்று லாரி ஓட்டுனர் தகவல் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. காவல் நிலையம் சென்று நியாயம் கிடைக்காத காரணத்தினால் யோகி ஆதித்யநாத் வீடு முன்னதாக சிறுமி தீ குளிக்க முயன்றார். இதனையடுத்து 2018-ம் ஆண்டு ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ. செங்கார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையும் நடைபெற்றது.
இதற்கிடையே போலீஸ் காவலில் இருந்த சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று பாதிக்கப்பட்ட சிறுமி ரேபரேலி சிறையில் உள்ள தனது உறவினரை பார்க்க சென்ற போது அவர்கள் சென்ற கார் ரேபரேலியில் விபத்துக்குள் சிக்கியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்தார். அவருக்கு லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் சென்ற இருபெண்கள் உயிரிழந்தனர். வழக்கறிஞர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக விசாரணை சிபிஐயிடம் மாற்றப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கடும் விமர்சனத்தை முன்வைத்த சுப்ரீம் கோர்ட்டு, 7 நாட்களில் விசாரணையை முடிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில், பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டு விபத்தில் சிக்கியது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் உ.பி.யில் பல்வேறு இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் சிக்கிய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் விபத்து நடந்த நாளில் பலத்த மழை காரணமாக தனது லாரி சறுக்கியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஷிஷ் பால் சிபிஐ அதிகாரிகளிடம் கூறுகையில்,
லாரியின் பிரேக்கை பயன்படுத்தியபோது பலத்த மழையின் காரணமாக லாரியின் டயர்கள் திடீரென சறுக்கியதால், லாரியின் முன் பகுதி இடதுபுறம் திரும்பியபோது, பின்புற பகுதி வலதுபுறம் திரும்பி காரைத் எதிர்பாரத விதமாக தாக்கியது. தனக்கும் இந்த விபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அங்கு எனக்கு யாரையும் தெரியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் மது அருந்துவதில்லை, ஆனால் தனக்கு புகையிலை பழக்கம் உண்டு என தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக தான் லாரி ஓட்டுவதாகவும், நான் பேதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story