பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப் சிங் திகார் சிறைக்கு மாற்றம்


பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப் சிங் திகார் சிறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 4 Aug 2019 9:10 PM IST (Updated: 4 Aug 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப் சிங் திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் குல்தீப் சிங் செங்கார் எம்.எல்.ஏ.வால் கடந்த 2017-ம் ஆண்டு கற்பழிக்கப்பட்ட 17 வயது சிறுமி, சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி விபத்துக்குள்ளானார். எம்.எல்.ஏ.வின் ஏற்பாட்டில் நடந்ததாக கூறப்படும் இந்த விபத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது வக்கீலும் படுகாயத்துடன் தப்பினர். பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர்.

லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணுக்கு தற்போது நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

உன்னாவ் சம்பவம் தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று முன் தினம் விசாரித்தது. அப்போது உன்னாவ் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், தினந்தோறும் வழக்கை விசாரித்து 45 நாட்களில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையும் பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆட்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டினார். பெண்கள் உரிமைக் குழு உறுப்பினர்களிடம் பேசிய அப்பெண்ணின் தாயார், வழக்கைத் திரும்பப் பெறுமாறு அச்சுறுத்துவதற்காக வந்தபோது குண்டர்கள் தனது இளைய மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறினார்.

மேலும், எம்.எல்.ஏ-வின் ஆட்கள் தனது கணவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும், தனது மாமியாரும் தாக்கப்பட்டதாகவும் கூறினார். தங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் இழப்பீடும் கிடைக்கவில்லை என்று தன் குடும்பத்துக்கு நடந்த கொடூரத்தை அவர் தெரிவித்தார்.

இதனிடையே இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞருக்கும் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், உன்னாவ் சிறுமியின் மாமாவை, பாதுகாப்பு கருதி உ.பி. சிறையிலிருந்து டெல்லி திகார் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ, புகைப்படத்தையோ ஊடகங்கள் வெளியிடக் கூடாது என தடைவிதித்துள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை மோசமாக இருப்பதால் டெல்லி மருத்துவமனையிலிருந்து மாற்றத் தேவையில்லை என்று கூறி வழக்கு விசாரணையைத் (நாளை 5-ம் தேதி ) திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் உத்தரவையடுத்து உத்தர பிரதேசம் சிதாப்பூர் சிறையில் இருந்த  குல்தீப் சிங், சாசி சிங்  ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர்.  அவர்கள் நாளை டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.


Next Story