‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் - மத்திய மந்திரி அளித்த உறுதியை ஏற்று முடிவு


‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் - மத்திய மந்திரி அளித்த உறுதியை ஏற்று முடிவு
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 5 Aug 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள், மத்திய சுகாதார மந்திரி அளித்த உறுதியை ஏற்று பணிக்கு திரும்பினர்.

புதுடெல்லி,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே மக்களவையில் நிறைவேறி இருப்பதால், இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்று விட்டது.

அதே சமயத்தில், இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி ‘எய்ம்ஸ்’, சப்தர்ஜங் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் தங்கி பணிபுரியும் டாக்டர்கள், கடந்த வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் குதித்தனர். 4-வது நாளாக நேற்றும் அவர்களின் வேலைநிறுத்தம் நீடித்தது. அவசர சிகிச்சையை தவிர, மற்ற சிகிச்சைகளை அவர்கள் புறக்கணித்து வந்தனர். இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்களுக்கு ‘எக்சிட்’ தேர்வு அறிமுகம், ‘எய்ம்ஸ்’ நுழைவுத்தேர்வு, ஆயுர்வேதம், ஓமியோபதி, சித்தா போன்ற இந்திய முறை மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் பார்க்க அனுமதி போன்ற அம்சங்களை எதிர்த்து அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், எய்ம்ஸ், சப்தர்ஜங் ஆஸ்பத்திரிகளில் தங்கி பணிபுரியும் டாக்டர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்த்தன் நேற்று தனது வீட்டுக்கு அழைத்து பேசினார். பின்னர், இதுகுறித்து ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறியிருந்ததாவது:-

டாக்டர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்தேன். தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மருத்துவ கல்வி உலகில் பெரிய மாற்றம் என்றும், 130 கோடி மக்களுக்கும் சிறப்பான சுகாதார வசதி கிடைக்க வரப்பிரசாதம் என்றும் அவர்களிடம் தெரிவித்தேன். மசோதா தொடர்பான அவர்களின் சந்தேகங்களை போக்கினேன். தேசநலன் கருதியும், நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளை கருதியும் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

மத்திய மந்திரி சந்திப்பை தொடர்ந்து, ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் தங்கி பணிபுரியும் டாக்டர்கள் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நடந்த விவாதத்தின் அடிப்படையில், வேலைநிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற சங்கத்தின் செயற்குழு முடிவு செய்தது. அதன்படி, அந்த டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பினர். இதுதொடர்பாக ‘எய்ம்ஸ்’ இயக்குனருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளை வகுக்கும்போது, எங்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ வர்த்தன் உறுதி அளித்தார். எங்கள் கவலைகளுக்கு தீர்வு காண்பதாக தெரிவித்தார். எனவே, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதுபோல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரையிலான நாட்கள், பணிக்கு வந்த நாட்களாக கருதப்படும் என்று டாக்டர்களுக்கு ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

ஆனால், சப்தர்ஜங் ஆஸ்பத்திரி டாக்டர்கள், வேலைநிறுத்தத்தை கைவிடுவது பற்றி முடிவு எடுக்கவில்லை.


Next Story