இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக இன்று குறிக்கப்படுகிறது; மெகபூபா முப்தி


இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக இன்று குறிக்கப்படுகிறது; மெகபூபா முப்தி
x
தினத்தந்தி 5 Aug 2019 8:17 AM GMT (Updated: 5 Aug 2019 8:17 AM GMT)

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக இன்று குறிக்கப்படுகிறது என மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.  இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக அமித் ஷாவுடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட இதர அமைச்சர்களும் பங்கேற்றனர்.  இதன்பின் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் இன்று கூடியது. 

இதில் பேசிய மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டபிரிவு, காஷ்மீர் மக்களுக்கான 35 ஏ சட்டபிரிவு ரத்து செய்யப்படுகிறது.  சிறப்பு பிரிவுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.  இதற்கான குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு உள்ளது என்றும்  அவர் கூறினார்.  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணையையும் மத்திய அரசு வெளியிட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெஹபூபா முப்தி கூறும்பொழுது, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக இன்று குறிக்கப்படுகிறது.  அரசின் இந்த முடிவு சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது.  இதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியா ராணுவ ஆட்சி செய்வதற்கு வழிவகுக்கும்.

காஷ்மீரின் மக்களை பயங்கரவாதிகளாக்கி நிலப்பகுதியை பெற அவர்கள் விரும்புகின்றனர்.  இதனால் காஷ்மீர் பற்றிய வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இருந்து இந்தியா தோல்வி அடைந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Next Story