காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: நாடாளுமன்றத்தில் வைகோ கடும் எதிர்ப்பு


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: நாடாளுமன்றத்தில் வைகோ கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 Aug 2019 1:58 PM IST (Updated: 6 Aug 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட மசோதாவை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய ஜனநாயக வரலாற்றில் இந்த நாள் ரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்த நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள். காங்கிரஸ் கட்சி தான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்சினை இப்படி வெடிப்பதற்கே காங்கிரஸ் கட்சி தான் காரணம். நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

பா.ஜ.க. இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. 2 லட்சம் படையினரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், மறுபக்கம் பாகிஸ்தானில் அல்கொய்தா அமைப்பினர், ஒரு பக்கம் நம் மீது வெறுப்பு கொண்டிருக்கும் செஞ்சீனா தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது, அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிடும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்சினை போல் பிரச்சினை ஆகும். ஐ.நா. மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்.

இந்த மசோதாவை கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது. காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பா.ஜ.க. இனி தீர்வுகாணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது.

இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்.


Next Story