சிறப்பு அந்தஸ்து ரத்து : காஷ்மீரில் உஷார் நிலையில் ராணுவம் - விமானப்படை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதை பற்றி வெளியில் சொல்லாமல் அமைதி காத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக லோக்சபா, ராஜ்யசபாவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
மாநிலங்களவையில் காஷ்மீர் இடஒதுக்கீடு என்ற பெயரில் பேச ஆரம்பித்த அமித்ஷா திடீரென ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அத்தோடு அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தும் விட்டார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத எதிர்க்கட்சிகள் வெட்கக்கேடு, வெட்கக்கேடு என்று ஆவேச முழக்கமிட்டன.
இந்த கூச்சல் குழப்பங்களுக்கு இடைய அமித்ஷா உரையை வாசித்தும் முடித்து விட்டார். இதன் மீது இன்று விவாதம் நடந்து வருகிறது. இந்த மசோதாவுக்கு போதிய ஆதரவு இருப்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேறிவிடும் என்பதால் இனி ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களை போல் ஒரு மாநிலமாக மாறிவிடும்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி, அதிமுக,பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், அசாம் கன பரிஷத், சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
காங்கிரஸ், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசிய மாநாட்டு கட்சி , மக்கள் ஜனநாயக் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரில் ஏற்கனவே 30,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், விமானப்படை மூலம் இன்று (ஆக.05) மேலும் 8000க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உ.பி., ஒடிசா, அசாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துணை ராணுவத்தினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story