கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் வெடிப்பு; போக்குவரத்து பாதிப்பு


கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் வெடிப்பு; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 3:42 AM GMT (Updated: 6 Aug 2019 3:42 AM GMT)

கர்நாடகாவின் பெலகாவியில் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஜூன் மாதம் 2வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. முதலில் தென்கர்நாடக பகுதிகளான சிவமொக்கா, குடகு, மங்களூரு, சிக்கமகளூரு, பெங்களூரு உள்பட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் இந்த பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்கர்நாடக பகுதிகளில் மழை குறைந்தது. ஆனால் மராட்டிய மாநிலத்தில் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழையால் வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் தற்போது அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. அவர்களை வீடுகளை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தென்கர்நாடக பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  கோணிகொப்பா, ஐயங்கேரி, விராஜ்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன.

இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு உள்ளது. விராஜ்பேட்டையில் இருந்து மாகுட்டா வழியாக கேரள மாநிலம் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று கர்நாடகாவின் பெலகாவியில் நிப்பானி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story