காங்கிரசுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி...! மத்திய அரசின் நடவடிக்கைக்கு முக்கிய தலைவர் ஆதரவு
காங்கிரசுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை நீக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. குறிப்பாக காஷ்மீர் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி அவையில் எதிர்ப்பை பதிவு செய்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். தலைமையில்லாத காங்கிரஸ் கட்சியில் பல்வேறும் தங்களுடைய கருத்தை வெளிப்படையாக அறிவித்து வருகிறார்கள்.
சில தலைவர்களின் கருத்து காங்கிரசுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பார்க்கப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், இளம் தலைவரும், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகி மத்திய அரசுக்கு ஆதரவான கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசமாக பிரிப்பதை ஆதரிக்கிறேன். இந்தியாவை ஒருங்கிணைப்பதை இது நிறைவேற்றும். இவ்விவகாரத்தில் அரசியலமைப்பு முறைகள் சரியாக பின்பற்றப்பட்டால் சிறப்பானதாக இருக்கும். இதுதேசத்தின் நலன் சார்ந்தது. எனவே, நான் ஆதரிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
சிந்தியாவிடம் இருந்து இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் என்பதில் ஐயம் கிடையாது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற கடினமாக உழைத்தவர் சிந்தியா. பா.ஜனதாவின் நெருக்கடியான போட்டிக்கு மத்தியில் காங்கிரசுக்காக கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டி கடினமான போட்டியை கொடுத்து காங்கிரசுக்கு வெற்றியை கொடுத்தார். ஆனால் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. 2019 நாடாளுமன்றத்தேர்தலில் உ.பி.யில் பிரியங்காவுடன் இணைந்து பணியாற்றினார். வெற்றிக்கிடைக்கவில்லை என்றாலும், குறுகிய காலத்தில் பாராட்டத்தக்க பணியை காங்கிரசுக்காக ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story