காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேறியது: ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - நாடாளுமன்றத்தில் அமித்ஷா ஆவேசம்


காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேறியது: ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - நாடாளுமன்றத்தில் அமித்ஷா ஆவேசம்
x
தினத்தந்தி 7 Aug 2019 5:45 AM IST (Updated: 7 Aug 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரை 2 ஆக பிரிக்க வகைசெய்யும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. அப்போது பேசிய அமித்ஷா, ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம், அதற்காக உயிரை கொடுக்கவும் தயார் என்று ஆவேசமாக கூறினார்.

புதுடெல்லி,

இந்திய திருநாட்டின் வடகோடியில் எழில் கொஞ்சும் மாநிலமாக இருப்பது காஷ்மீர்.

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இந்த மாநிலம் இந்திய விடுதலைக்கு பின்னரே பாரதத்துடன் இணைந்தது.

இந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்தில் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் இணைக்கப்பட்டன. இந்த பிரிவுகள் மூலம் காஷ்மீர் அரசும், மக்களும் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்தனர். என்றாலும் அங்கு பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

சுமார் 70 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இது தொடர்பாக நாடாளுமன்ற தேர்தலின் போதே பா.ஜனதா அரசு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஆட்சி அமைத்தபின் அந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

அதன்படி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் நிறைவேற்றியது. பின்னர் அது ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது ஒரு அரசியல் சாசன படுகொலை எனவும் வர்ணித்தன. எனினும் அவர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக அரசியல் சாசனப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019 ஆகியவற்றை நேற்று மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் ஜம்மு-காஷ்மீர் என்று சொல்லும்போது, அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும், அக்சாய் சின்னையும் (சீனா ஆக்கிரமித்த பகுதி) ஒருங்கிணைத்தே குறிக்கும்.

அக்சாய் சின் இணைந்த லடாக் பகுதி, சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாறுகிறது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் இந்த கோரிக்கை மோடி அரசு மூலம் நிறைவேறுகிறது.

இதைப்போல ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்-மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபை இருக்கும்.

காஷ்மீர் தொடர்பான அரசியல் சாசன உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி நேற்று (நேற்று முன்தினம்) கையெழுத்து போட்டு உள்ளார். இதன்மூலம் அரசியல் சட்டப்பிரிவு 35ஏ ரத்தாகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒன்றை இந்த சபை பார்க்கிறது. இந்த மசோதா வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

பின்னர் உறுப்பினர்களின் விவாதம் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக அமித்ஷாவுக்கும், எதிர்க் கட்சியினருக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் மூண்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, ‘காஷ்மீர் விவகாரம் ஒரு உள்நாட்டு விவகாரம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அங்குள்ள நிலைமை தொடர்பாக 1948-ம் ஆண்டு முதலே ஐ.நா. சபை கண்காணித்து வருகிறது. பின்னர் சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் போன்றவை அமலாகின. அப்படி என்றால் இது ஒரு இருதரப்பு பிரச்சினையா? அல்லது உள்நாட்டு விவகாரமா?’ என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் காஷ்மீர் தொடர்பான புதிய வழிமுறைகள் அனைத்தும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கும் பொருந்துமா? என வினவினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமித்ஷா, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் அனைத்தும் காஷ்மீரின் அங்கம்தான். ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள காஷ்மீரை நாங்கள் மீட்போம். அதற்காக உயிரை கொடுக்கவும் நாங்கள் தயார்’ என்று ஆவேசமாக கூறினார்.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், ‘அமித்ஷா ஏன் இவ்வளவு ஆவேசமாக இருக்கிறார்?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்திய பகுதி இல்லை என நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால்தான் நான் ஆவேசப்படுகிறேன்’ என்று தெரிவித்தார்.

இந்த மசோதா மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி, ‘காஷ்மீர், ஜுனாகத், ஐதராபாத் போன்ற பகுதிகள் அனைத்தும் இந்தியாவுடன் இருக்கிறதென்றால், அதற்கு காரணம் ஜவஹர்லால் நேருவாகும்’ எனக்கூறினார்.

உடனே குறுக்கிட்டு பேசிய அமித்ஷா, இது வல்லபாய் படேலின் பங்களிப்புக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகும் என தெரிவித்தார்.

இதைப்போல தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, ‘காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது. மூத்த அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தாங்கள் எங்கே இருக்கிறோம்? என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. எனது நண்பர் பரூக் அப்துல்லா எங்கே? அவர் இந்த சபையின் உறுப்பினர் ஆவார்’ என்று கூறினார்.

இந்த கருத்தை மற்றொரு தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறனும் ஆதரித்து பேசினார்.

இவ்வாறு உறுப்பினர்களின் விவாதங்கள் நிறைவடைந்ததும் உள்துறை மந்திரி அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு, இந்தியாவுடனான காஷ்மீரின் உறவில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அங்கு கடந்த 1989-ம் ஆண்டு முதல் 41,500-க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதத்துக்கு பலியாகி இருக்கின்றனர். இதற்கு 370 மற்றும் 35ஏ பிரிவுகளே காரணம்.

இந்த பிரிவுகளை நீக்கியது வரலாற்று தவறு இல்லை. வரலாற்று தவறை நாங்கள் சரி செய்திருக்கிறோம். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு மோடி அரசுக்கு தயக்கம் இல்லை. அங்கு இயல்பு நிலை திரும்பினால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இந்தியா தொடர்ந்து உரிமை கோரும். காஷ்மீர் தொடர்பாக, பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் காஷ்மீர் மக்களுடன் பேசுவதற்கு நாங்கள் தயார். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

பின்னர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அவை நிறைவேறின.

இதில் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 351 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் வாக்களிப்பை தவிர்த்தார். இதைப்போல காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 370 பேரும், எதிராக 70 பேரும் ஓட்டு போட்டனர்.

இவ்வாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா மற்றும் தீர்மானம் நிறைவேறியதன் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து ரத்தாகிறது. மேலும் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது.


Next Story