வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 0.35 சதவீதம் குறைவு; ரிசர்வ் வங்கி நடவடிக்கை
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 0.35 சதவீதம் அளவிற்கு குறைத்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை,
நாட்டின் பொருளாதாரத்தினை மந்த நிலையில் இருந்து புதுப்பிக்கவும் மற்றும் வருவாய்க்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக, வட்டி விகிதத்தினை குறைக்கும் நடவடிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 2019-20 ஆண்டிற்கான ரெப்போ ரேட் விகிதத்தினை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. ரெப்போ ரேட் என்பது வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ஆகும்.
மும்பையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். 6 உறுப்பினர்களை கொண்ட இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ ரேட்) குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.
இதன்படி, இந்த வட்டி விகிதம், கடந்த ஜூன் மாதத்தில் 3வது முறையாக 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இந்த குறைப்பு நடவடிக்கை, 2019ம் ஆண்டு ஜனவரி தொடங்கி 5 மாதங்களில் 3வது முறையாக எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் முதன்முறையாக 6 சதவீதத்திற்கும் குறைவாக இந்த வட்டி விகிதம் குறைந்திருந்தது.
இதனிடையே, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவானது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4வது முறையாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி 0.35 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதம் குறைந்து 5.40 சதவீதம் என்ற அளவில் ரெப்போ ரேட் இருக்கும். இதனால் 2019 ஜனவரியில் இருந்து ஓராண்டில் மொத்தம் 1.10 சதவீதம் அளவிற்கு இந்த வட்டி விகிதம் குறைந்துள்ளது.
இதனை அடுத்து வீடு, வாகனங்கள் வாங்குவோர் மற்றும் தொழில் தொடங்குவோர், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
இதேபோன்று நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, 7 சதவீதம் என்ற அளவில் இருந்து 6.9 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் ஆனது முதல் அரையாண்டில் 3.1 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாவது அரையாண்டில் 3.5 முதல் 3.7 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story