கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை


கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை
x
தினத்தந்தி 8 Aug 2019 10:33 AM IST (Updated: 8 Aug 2019 10:33 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கனமழையை முன்னிட்டு குடகு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.  ஆனால் தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டும் வறட்சி தீவிரமாக இருக்கும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறினர். பருவமழை காலம் தொடங்கி 2 மாதங்களுக்கு பிறகு தற்போது கர்நாடகத்தில் பருவமழை மிக தீவிரமாக பெய்ய தொடங்கியுள்ளது.

குறிப்பாக வட கர்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கலபுரகி, ராய்ச்சூர், தார்வார், ஹாவேரி, கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பெலகாவியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பேரழிவு ஏற்பட்டு உள்ளது.

தென்கன்னடா மாவட்டங்களான குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குடகு மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்ய கூடும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று மற்றும் நாளை (8 மற்றும் 9 ஆகிய நாட்களுக்கு) விடுமுறை விடப்பட்டு உள்ளது.

Next Story