காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் - பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம்


காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் - பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம்
x
தினத்தந்தி 9 Aug 2019 10:24 AM GMT (Updated: 9 Aug 2019 10:24 AM GMT)

காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆப்கானில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி  பேச்சுவார்த்தை நடத்துகிறது. 2020-ல் அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடவிரும்பும் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் படைகளை ஆப்கானிலிருந்து திரும்ப பெற நடவடிக்கையை மேற்கொள்கிறார். இதுவரையில் தலிபான்களுக்கு உதவிய பாகிஸ்தான், இனி தனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்பியது. காஷ்மீர் விவகாரத்தில் தலிபான் தன்னுடன் கைக்கோர்க்கும் என பாகிஸ்தானுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. 

ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானில் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்போது அமெரிக்க படைகள் வெளியேறுவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகவே அமையும் என வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. இந்நிலையில் தலிபான்களிடம் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷென்பாஸ் ஷெரீப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், ஆப்கானிஸ்தானில்கூட மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். காபூலில்கூட அமைதி நிலவுகிறது. ஆனால் காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது. நாம் என்ன மாதிரியான ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம் என்றார். ஆப்கானிஸ்தானில்கூட அமைதி வந்துவிட்டது ஆனால் காஷ்மீரில் இன்னும் அமைதி வரவில்லை என்றார். இதற்கு தலிபான் அமைப்பு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

தலிபான் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதாக செய்தி கிடைத்தது. அங்கு படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் மக்கள் பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள சூழல் குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுக்கும் முடிவுகள் அப்பகுதியில் வன்முறை, குழப்பத்துக்கு இட்டுச்செல்லாத வகையில் தடுக்க வேண்டும். சட்டப்பூர்வமாக காஷ்மீர் மக்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டும். 

சில கட்சிகள் ஆப்கானிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசுகிறார்கள். இது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் காஷ்மீருக்கு தொடர்பில்லாதது. இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்தும் மேடையாக ஆப்கானிஸ்தானை மாற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் ஜாஹித் நசருல்லா பேசுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது நடக்கும் அமைதி ஒப்பந்த முயற்சி காஷ்மீரில் பாதிப்பை ஏற்படுத்தாது. துரதிர்ஷ்டவசமாக காஷ்மீர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். 

Next Story