ஜம்முவில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்டது, இன்டர்நெட் சேவை தொடர்ந்து துண்டிப்பு


ஜம்முவில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்டது, இன்டர்நெட் சேவை தொடர்ந்து துண்டிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 1:11 PM GMT (Updated: 9 Aug 2019 1:11 PM GMT)

ஜம்முவில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்டுள்ளது, இன்டர்நெட் சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.


காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

காஷ்மீர் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. 
ஆனால் ஜம்மு பகுதியானது, இந்துக்கள் அதிகம் வாழும் இடமாகும். எனவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை இப்பகுதியினருக்கு மகிழ்ச்சியையே அளித்துள்ளது. ஜம்முவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக அப்பகுதில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜம்மு மாவட்ட ஆணையர் சுஷ்மா சவுகான் பிறப்பித்த உத்தரவில் மாவட்டத்தில் இணைய சேவைகள் துண்டிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜம்முவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை மீண்டும் திறக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உதம்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் 144 தடை உத்தரவு சில இடங்களில் அமலில் உள்ளது. 144 தடை உத்தரவு கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களிலிருந்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஜம்மு பிராந்தியத்தின்கீழ் வரும் அனைத்து 10 மாவட்டங்களிலும் நிலைமை அமைதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story