ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜாவை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்


ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜாவை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்
x
தினத்தந்தி 9 Aug 2019 10:41 PM GMT (Updated: 9 Aug 2019 10:41 PM GMT)

காஷ்மீர் மாநிலத்துக்கு சென்ற கம்யூனிஸ்டு தலைவர்களான சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜாவை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதுடன், மீண்டும் அவர்களை டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே அங்கு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள பாதுகாப்பு படையினர், மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மாநிலத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதுடன், வெளியில் இருந்து காஷ்மீருக்கு செல்லும் தலைவர்களுக்கும் மாநிலத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காஷ்மீர் செல்வதற்காக நேற்று முன்தினம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் காஷ்மீரை சேர்ந்த முக்கிய கம்யூனிஸ்டு தலைவர்களை சந்திப்பதற்காக விமானம் மூலம் நேற்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேற முயன்றபோது திடீரென அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் ஸ்ரீநகருக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்ற சட்ட உத்தரவையும் அவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் காட்டினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களுடைய பயணம் குறித்து ஏற்கனவே மாநில கவர்னரிடம் தெரிவித்து இருப்பதாகவும், எனவே தங்களை வெளியேற அனுமதிக்குமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். எனினும் அனுமதி மறுத்த அதிகாரிகள், இது தொடர்பாக தலைவர்கள் இருவரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இறுதியில் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை விமானம் மூலம் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கம்யூனிஸ்டு தலைவர்களை திருப்பி அனுப்பிய விவகாரம் ஜனநாயக விரோத நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ள கட்சியினர், இது தொடர்பாக போராட்டம் நடத்துமாறு நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது குறித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‘இங்குள்ள (காஷ்மீர்) கம்யூனிஸ்டு தோழர்களை சந்திப்பதற்காகவும், நோய்வாய்ப்பட்டு இருக்கும் கம்யூனிஸ்டு தலைவர் தரிகாமியை பார்ப்பதற்காகவும் நாங்கள் இருவரும் விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தோம். இது தொடர்பாக ஏற்கனவே மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கிடமும் தகவல் தெரிவித்து இருந்தோம். ஆனாலும் எங்களை தடுத்து நிறுத்தி உள்ளனர்’ என்று தெரிவித்தார்.


Next Story