காங்கிரஸ் புதிய தலைவர் யார்? டெல்லியில் கூடியது காரியக் கமிட்டி கூட்டம்


காங்கிரஸ் புதிய தலைவர் யார்? டெல்லியில் கூடியது காரியக் கமிட்டி  கூட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2019 7:29 AM GMT (Updated: 10 Aug 2019 7:29 AM GMT)

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடியது.

புதுடெல்லி

டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கியது, கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் , வேணுகோபால், ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகுல் வாஸ்னிக், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் உள்ளிட்டோரின் பெயர்களை மூத்த தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மன்மோகன்சிங் அல்லது பிரியங்கா தலைமை ஏற்க வேண்டும் என்றும் சிலர் கோரி வருகின்றனர். இன்றைய காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில்  ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு  காங்கிரசின் அடுத்த தலைவரை  தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்படும். இந்த குழுக்கள்  காங்கிரஸ் தலைவரை தேர்ந்து எடுப்பது தொடர்பாக மண்டலம் மற்றும்  மாநில  தலைவர்களுடன்  ஆலோசனை நடத்துவார்கள்  என்று காங்கிரஸ் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

உறுப்பினர்கள் தலைவரை தேர்ந்து எடுப்பதில்  ஒருமித்த கருத்துக்கு வரத் தவறினால், கலந்தாலோசித்த பின்னர் கூட்டத்தில் ஒரு இடைக்கால கட்சித் தலைவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பல பெயர்கள் உள்ளன, ஆனால் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

ராகுல் காந்தி தன்னுடைய ராஜினாமா முடிவில் ஸ்திரமாக உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் கூடும் என தகவல் வெளியாகியது. இதனிடையே பிரியங்கா தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், பிரியங்கா காந்தி கட்சி தலைமை பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக இனி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுலுக்கு அடுத்தப்படியாக யார்? ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Next Story