சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் விவகாரம் குறித்து வைரலாகும் ‘மீம்ஸ்கள்’ நகைச்சுவையுடன், சர்ச்சையையும் கிளப்புவதால் சலசலப்பு


சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் விவகாரம் குறித்து வைரலாகும் ‘மீம்ஸ்கள்’ நகைச்சுவையுடன், சர்ச்சையையும் கிளப்புவதால் சலசலப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 3:39 AM IST (Updated: 11 Aug 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகின்றன. இதில் பல மீம்ஸ்கள் சர்ச்சையையும் கிளப்பி இருப்பதால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் இந்த காலகட்டத்தில் சமூகத்தில் நிகழும் எந்தவொரு முக்கியமான வி‌ஷயமும் இந்த வலைத்தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அது தொடர்பான மீம்ஸ்கள், நகைச்சுவை துணுக்குகள் போன்றவை வலைத்தளங்களை ஆக்கிரமித்து விடுகின்றன.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் முதல் ஒன்றுக்கும் உதவாத நிகழ்வுகள் வரை உலக அளவில் டிரெண்ட் ஆகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. இவை ஒருபுறம் நகைச்சுவையை ஏற்படுத்தி மக்களின் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளித்தாலும், மறுபுறம் சலசலப்பையும் அவ்வப்போது கிளப்பி விடுவது உண்டு.

அப்படித்தான் தற்போதைய காஷ்மீர் விவகாரமும் வலைத்தளவாசிகளுக்கு சிறந்த தீனியாகி இருப்பதுடன், சர்ச்சையையும் கிளப்பி விட்டிருக்கிறது. அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அரசின் மிகப்பெரிய இந்த நடவடிக்கை தொடர்பான மீம்ஸ்கள், நகைச்சுவை துணுக்குகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

குறிப்பாக சிறப்பு அந்தஸ்து நீங்கியதால் காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் இடம் வாங்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை கிண்டலாக சொல்லும் மீம்ஸ்கள் ஏராளம் இடம்பெற்று உள்ளன. எடுத்துக்காட்டாக, ‘பிளாட் வாங்லியோ பிளாட்... அனந்த்நாக், புல்வாமா, பாரமுல்லா போன்ற பகுதிகளில் உங்கள் வீட்டை கட்டிக்கொள்ளுங்கள். இதற்காக குறைந்த தவணையில் இடம் வாங்கிடுங்கள்...’ என ஒரு வலைத்தளவாசி குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜையை காஷ்மீரிலும் கொண்டாடலாம் என்பதை குறிக்கும் வகையில், அங்குள்ள ‘தால் ஏரியிலும் இனி சாத் பூஜை கொண்டாடலாம்’ எனக்கூறி அந்த ஏரியின் புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இது போன்ற மீம்ஸ்கள் நகைச்சுவையை அளித்தாலும், சில துணுக்குகள் முகம் சுழிக்கவும் வைக்கின்றன. குறிப்பாக சிறப்பு அந்தஸ்து நீங்கியதால், ‘அழகான காஷ்மீர் பெண்களை பிற மாநிலத்தவர்களும் மணந்து கொள்ள வழி பிறந்திருக்கிறது’ என்பது போன்ற மீம்ஸ்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது போன்ற மீம்ஸ்களை சில மாநிலங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கூட பகிர்ந்திருப்பதுதான் அருவருப்பின் உச்சமாக இருக்கிறது. இதைத்தவிர மத ரீதியான மீம்ஸ்களை பதிவோரும் இருக்கின்றனர். இது போன்ற மீம்ஸ்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன.

இது குறித்து டெல்லியை சேர்ந்த பிசியோதெரபி வல்லுனர் ஒருவர் கூறுகையில், ‘எல்லோருக்கும் காஷ்மீரின் நிலத்தின் மீதும், பெண்களின் மீதும்தான் விருப்பம் இருக்கிறது. காஷ்மீரிகளின் மனங்களை வெல்ல யாருக்கும் விருப்பம் இல்லை’ என்று வருத்தத்துடன் கூறினார்.


Next Story