தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு + "||" + Sonia Gandhi elected Congress president - Working Committee meeting decided unanimously

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் தலைவரானார், ராகுல் காந்தி. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்காக தீவிரமாக செயல்பட்டு வந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலில் வெறும் 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.


இதனால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது முடிவை கட்சியின் காரிய கமிட்டியோ, நிர்வாகிகளோ ஏற்கவில்லை. எனினும் தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கடந்த மாதம் அறிவித்தார்.

ஆனாலும் புதிய தலைவர் தேர்வில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கட்சியில் குழப்பம் நீடித்தது. எனவே கட்சிக்கு தற்காலிக தலைவரையாவது உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என சசிதரூர், மிலிந்த் தியோரா போன்ற தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும் முடிவுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. இதற்காக கட்சியின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி நேற்று கூடியது. டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா, ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும், காங்கிரஸ் தலைவராக தொடருமாறு ராகுல் காந்தியிடம் மீண்டும் ஒரே குரலாக கேட்டுக்கொண்டனர். ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியல் சாசனத்தை பா.ஜனதா அரசு சீரழித்து வரும் இந்த நேரத்தில் அதை எதிர்ப்பதற்கு ஒரு வலிமையான தலைவர் வேண்டும் எனவும், அதற்கு ராகுல் காந்தியே தகுதியானவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த கோரிக்கைகளை நிராகரித்த ராகுல் காந்தி, தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக விரிவான ஆலோசனைகளை நடத்துமாறும் காரிய கமிட்டியை அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட காரிய கமிட்டி உறுப்பினர்கள் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக 5 பிராந்திய குழுக்களை நியமித்தனர். அதன்படி அகமது படேல், அம்பிகா சோனி, ஹரிஷ் ராவத் உள்ளிட்டோரை கொண்ட வடகிழக்கு பிராந்திய குழுவும், கே.சி.வேணுகோபால், தருண் கோகாய், குமாரி செல்ஜா உள்ளிட்டோர் அடங்கிய கிழக்கு பிராந்திய குழுவும் அமைக்கப்பட்டன.

இதைப்போல பிரியங்கா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ப.சிதம்பரம் உள்ளிட்டோரை கொண்ட வட பிராந்திய குழு, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ஏ.கே.அந்தோணி, மோதிலால் வோரா உள்ளிட்டவர்களை கொண்ட மேற்கு பிராந்திய குழு, மன்மோகன் சிங், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரை கொண்ட தெற்கு பிராந்திய குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் ஆலோசனை நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்வது என முடிவு செய்த காரிய கமிட்டி, இதற்காக மீண்டும் மாலையில் கூடுவது எனவும் முடிவு செய்தது.

பின்னர் இந்த 5 குழுக்களும் தனித்தனியாக கூடி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. கட்சியின் பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், சட்டசபை தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் இந்த குழுக்கள் ஆலோசனை நடத்தின. இதில் டெல்லியில் இருந்தவர்களிடம் நேரிலும், இல்லாதவர்களிடம் தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி பரிந்துரைகள் பெறப்பட்டன.

முன்னதாக இந்த குழுக்களில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்ட ராகுல், சோனியா ஆகியோர், கூட்டத்தில் இருந்து வெளியேறினர். புதிய தலைவரை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையும், ஜனநாயகமும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இரவில் மீண்டும் காரிய கமிட்டி கூடியது. ராகுல், சோனியா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பிராந்திய குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, காஷ்மீர் விவகாரம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தியை, கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. கட்சியின் தலைவராக நீடிப்பதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சோனியா காந்தி ஏற்கனவே 1998-ம் ஆண்டு முதல் 2017 வரை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில், சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்படுவார்” என்று கூறினார்.