காஷ்மீரில் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது: காவல்துறை


காஷ்மீரில் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது: காவல்துறை
x
தினத்தந்தி 12 Aug 2019 12:07 PM IST (Updated: 12 Aug 2019 12:07 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும்  பிரித்துள்ளது. இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைதொடர்பு சேவைகள் முடக்கம் என கடந்த 5-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது காஷ்மீரின் பல பகுதிகளில் நிலைமை சீரடைய தொடங்கி உள்ளது. குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. எனவே அந்த மாவட்டங்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால் அங்கு கல்வி நிறுவனங்கள்  திறக்கப்பட்டும், அரசு அலுவலகங்கள் செயல்பாட்டுக்கு வந்தும்,  கடைத்தெருக்களில் வியாபாரம் சீரடைந்தும் இருக்கின்றன. மக்களும் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி அன்றாட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று தடை உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறந்தன. மார்க்கெட்டுகளும் இயங்கின. ஏ.டி.எம்.களும் திறந்திருந்தன. அந்த நேரத்திலும் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது.

இன்று பக்ரீத் தொழுகைக்காக காலையில் தடை உத்தரவு விலக்கிக்  கொள்ளப்பட்டது. அப்போது அருகில் உள்ள மசூதிகளுக்கு மட்டும் சென்று தொழுகை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. குறுகிய அளவிலேயே கூட்டம் இருக்க வேண்டும் என்று உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக பாதுகாப்பு படையினர் வாகனங்களில் ஒலிபெருக்கியில் அறிவிப்புகளை வெளியிட்டு சென்றனர். வழக்கமாக பக்ரீத் தொழுகை நடைபெறும் பல மசூதிகளில் இன்று தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும், தொழுகைக்கு வந்தவர்களும், சில இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். கல்வீச்சு சம்பவமும் நடந்தது. கொஞ்சம் பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுக்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டெலிபோன் மற்றும் இணையதள வசதிகள் தொடர்ந்து 7 நாட்களாக முடக்கப்பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகையையொட்டி அவை செயல்பட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலவரம் வெடிக்கலாம் என கருதுவதால் செயல்பாட்டுக்கு அனுமதிக்கவில்லை. இதற்கிடையே  வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கும், முக்கிய தகவல்களை கூறுவதற்கும் போலீஸ்துறை 300 இடங்களில் பொதுடெலிபோன் வசதியை ஏற்படுத்தி இருந்தனர். அதன் மூலம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “தற்போது வரை எந்தவித விரும்பத்தகாக சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Next Story