கமல்நாத்தின் உறவினருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து முடக்கம் - வருமான வரித்துறை அதிரடி


கமல்நாத்தின் உறவினருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து முடக்கம் - வருமான வரித்துறை அதிரடி
x
தினத்தந்தி 12 Aug 2019 9:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:58 PM GMT)

மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்தின் உறவினருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து முடக்கம் செய்து வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்தின் மருமகனும் தொழிலதிபருமான ரதுல் புரி, இந்துஸ்தான் பவர்புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் பினாமி பெயரில் வாங்கப்பட்டு இருந்த ரதுல் புரியின் வீட்டை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மேலும் மொரீசியசை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்று வைத்திருந்த அன்னிய நேரடி முதலீட்டு தொகை 40 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.284 கோடி) முடக்கப்பட்டது.

பினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறைகேடு தொடர்பாக ரதுல் புரியின் தந்தையும், கமல்நாத்தின் மைத்துனருமான தீபக் புரி மீதும் விசாரணை நடந்து வருகிறது. ரதுல் புரி மீது ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கிலும் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story