காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை


காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனு:  சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
x
தினத்தந்தி 13 Aug 2019 1:30 AM GMT (Updated: 13 Aug 2019 1:30 AM GMT)

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், ”ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களை விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவும் சூழலை ஆராய குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று ( செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. 

Next Story