தேசிய செய்திகள்

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - 2 வாரம் கழித்து விசாரிப்பதாகவும் அறிவிப்பு + "||" + Supreme Court refuses to ease restrictions on Kashmir - After 2 weeks The announcement would investigate

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - 2 வாரம் கழித்து விசாரிப்பதாகவும் அறிவிப்பு

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - 2 வாரம் கழித்து விசாரிப்பதாகவும் அறிவிப்பு
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி உத்தரவிட மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, மனுவை 2 வாரம் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
புதுடெல்லி,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தெஹ்சீன் பூனாவாலா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.


அதில், காஷ்மீரில் கடந்த 4-ந்தேதி முதல் கடையடைப்பு மற்றும் கலவர சூழல் நிலவி வருகிறது. தொலைபேசி இணைப்பு, இணையதள வசதி, செய்தி சேனல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மூத்த அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டு ஒரு நீதி ஆணையத்தை நியமித்து மாநிலத்தில் ஆய்வு செய்ய வேண்டும். ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்த உத்தரவிட வேண்டும். காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மேனகா குருசாமி, காஷ்மீரில் அனைத்து தொடர்பு சாதனங்களையும் துண்டிக்க வேண்டுமா? குறைந்தபட்சம் மருத்துவமனைகள், பள்ளிகள், காவல் நிலையங்களாவது செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நீதிபதி அருண் மிஸ்ரா, அங்கு நிலைமை தீவிரமாக இருக்க வேண்டும். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற பதற்றம் இருக்கலாம் என்றார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம், இன்னும் எத்தனை நாட்கள் அங்கே கட்டுப்பாடுகளை தொடர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அட்டார்னி ஜெனரல், அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு பரிசீலனையில் எடுத்துவருகிறது. இதுபோன்ற ஒரு சூழல் 2016-ல் ஏற்பட்டபோது அதனை சரிசெய்ய ஏறத்தாழ 3 மாதங்கள் எடுத்துக்கொண்டது. கள நிலவரத்தின் அடிப்படையில் தற்போதைய நிலவரம் வெகுசில நாட்களில் தீர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு நிலைமை நாளுக்கு நாள் மாறி வருகிறது. அதனை பரிசீலித்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு மிகவும் கவனமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை என்று கூறினார்.

கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிட மறுத்த நீதிபதிகள், அங்கு நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளதால் மத்திய அரசுக்கு நாம் சிறிது அவகாசத்தை அளிக்க வேண்டும் என்றனர்.

அதற்கு மேனகா குருசாமி, இந்த மனுவை 2 வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்த மனுவை எதற்கு நிலுவையில் வைக்க வேண்டும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மேனகா குருசாமி, மத்திய அரசு தனக்கு பொறுப்பு இல்லை என்று தட்டிக்கழிக்க முடியாது. காஷ்மீர் மக்களை முழு சுதந்திரம் உள்ள இந்திய குடிமக்களாக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால் அவர்கள் மீது முழு கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று கூறினார்.

நீதிபதிகள், இந்த மனுவை 2 வாரங்களுக்கு நிலுவையில் வைத்து அதன்பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தனர்.