தேசிய செய்திகள்

சிலை இல்லாவிட்டாலும் தலத்தை வழிபடும் நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது - அயோத்தி வழக்கில் வக்கீல் வாதம் + "||" + Hinduism is believed to worship the head even though there is no idol - In the case of Ayodhya, The advocacy argument

சிலை இல்லாவிட்டாலும் தலத்தை வழிபடும் நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது - அயோத்தி வழக்கில் வக்கீல் வாதம்

சிலை இல்லாவிட்டாலும் தலத்தை வழிபடும் நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது - அயோத்தி வழக்கில் வக்கீல் வாதம்
சிலை இல்லையென்றாலும் தலத்தை வழிபடும் நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது என்று அயோத்தி வழக்கில் ராம் லல்லா தரப்பு வக்கீல் வாதிட்டார்.
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை பிரிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை 5-வது நாளாக நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடைபெற்றது. அப்போது ராம் லல்லா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடியதாவது:-


இந்து மத நம்பிக்கையில் நதிகள், கைலாச மலை, கோவர்த்த மலை ஆகியவை வழிபாட்டு தலங்களாக கருதப்படுகின்றன. எனவே ஒரு தலத்தில் சிலை இருக்கிறதோ இல்லையோ அந்த தலத்தையே வழிபடும் நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது. அந்த தலத்தின் புனிதத்தன்மைதான் அங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

19-ம் நூற்றாண்டில் இருந்து 1949-ம் ஆண்டு வரை அயோத்தி உள்வளாகத்தில் இந்துக்களின் பிரவேசம் தடுக்கப்பட்டது என்றோ, அந்த இடத்தில் தொழுகை நடைபெற்றது என்பதற்கோ ஆதாரம் எதுவும் கிடையாது என்று அலகாபாத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு வழக்கில் இரு சாட்சியங்களின் வாக்குமூலத்தில் பல நூற்றாண்டுகளாக அயோத்திக்கு இந்துக்கள் புனித பயணம் மேற்கொண்டு வந்திருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்து கோவிலில் சிலைக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளது. சிலையின் காப்பாளர் அதன் நலனுக்கு எதிராக செயல்பட்டால் அங்கு வழி படுகிறவர்களுக்கு போராடும் உரிமை உள்ளது.

கோவிலை இடித்ததும் அதன் மீது மசூதியை எழுப்பியதும் அந்த கோவிலின் உரிமையை எந்த வகையிலும் பாதிக்காது என்று அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. (அயோத்தியில் கோவில் இடிக்கப்படுவதற்கு முன்பு உள்ளதாக கூறப்படும் வரைபடத்தை அவர் நீதிபதிகளிடம் காட்டினார்) எதிர்த்தரப்பினரும் இந்துக்களுக்கு அந்த இடத்தில் உள்ள உரிமையை முற்றாக மறுக்கவில்லை.

1850-ல் இருந்து 1949 வரை முஸ்லிம்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்தியிருந்தாலும் அங்கு மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கு உரியது என்று கூறமுடியாது. அங்கு மசூதி கட்டப்பட்டதால் அந்த முழு இடமும் முஸ்லிம்கள் வசம் உள்ளதாக பொருள்படாது. இந்துக்களுக்கு அந்த இடத்தில் உரிமை இல்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

இருதரப்புக்கும் அந்த இடம் கூட்டாக சொந்தம் என்றுதான் கூறப்படுகிறது. இது தொடர்பான ஒவ்வொரு ஆவணமும், வாய்மொழி சாட்சியங்களும் இந்துக்கள் அங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு வைத்தியநாதன் வாதிட்டார்.

வக்பு வாரியத்துக்கு இந்த இடத்தை மறுப்பதன் மூலம் ராம் லல்லாவுக்கு இந்த இடத்துக்கு முழு உரிமை உள்ளது என்பதை எப்படி நிரூபிக்க முடியும் என்பதற்கு விடையுடன் வாருங்கள் என்று நீதிபதிகள் அவரிடம் கூறினார்கள்.

மதிய உணவுக்கு பிறகு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதத்தை தொடர்ந்தபோது, “சிலை உள்ள மூலஸ்தானம், அதன் சொத்துகள் மற்றும் அந்த இடமே வழி படும் தலமாக இருப்பது என்று 3 கருத்துகள் உள்ளன. அந்த இடத்தில் வேறு யாரும் இணையாக உரிமை கொண்டாட முடியாது” என்றார்.

இதற்கு நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், இதுதொடர்பாக இரு வேறுபட்ட கருத்துகளும் இருக்கலாம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதால் மட்டுமே அந்த இடத்தின் புனிதத்தன்மை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மாறாது. ஏதோ ஒரு கட்டத்தில் அங்கு வக்பு வாரியம் பிரவேசம் செய்தது என்றால் அந்த இடம் அவர்களுக்கு சொந்தமானதாக பொருளாகாது என்று வைத்தியநாதன் கூறினார்.

இதற்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறுக்கிட்டு, உங்கள் கூற்றுப்படி பார்த்தால் அங்கு ஒரு கோவில் இருந்தது. அங்கு அந்த கோவிலின் இடிபாடுகள் கிடைப்பதால் அந்த இடத்தை ஒரு வழிபடும் தலமாக கருதுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

கட்டிடம் அங்கு சிதிலம் அடைந்திருக்கலாம். ஆனால் பக்தர்கள் இன்னும் இருக்கிறார்கள். மேலும் கார்னகி அறிக்கையில், முஸ்லிம்களுக்கு மெக்கா உள்ளதுபோல இந்துக்களுக்கு அயோத்தி புனிதத்தலம் என்று கூறப்பட்டுள்ளது என்றார்.

அப்போது இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவன், விஷயங்களை தவிர்த்தும், தாவிக் குதித்தும் ஓடும் வாதமாக இது உள்ளது. அவர்கள் தரப்பில் இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று கூறினார்.

இதற்கு தலைமை நீதிபதி, உங்கள் முறை வரும்போது நீங்கள் வாதிடுங்கள். அப்போது நீங்கள் உங்களிடம் உள்ள ஆதாரங்களை முன்வையுங்கள். எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. இது எல்லா தரப்பு வக்கீல்களுக்கும் பொருந்தும். நாங்கள் எந்த வகையிலும் அவசரப்படுத்த மாட்டோம். எங்களுக்கு எந்த குறுக்கீடும் தேவை இல்லை என்று கூறி விசாரணையை (இன்றைக்கு) ஒத்திவைத்தார்.