எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் -ராகுல் காந்தி


எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் -ராகுல் காந்தி
x
தினத்தந்தி 14 Aug 2019 6:26 AM GMT (Updated: 14 Aug 2019 7:51 AM GMT)

எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் அசாதாரண சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் வெளிவந்ததாக  ராகுல் காந்தி அண்மையில் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்,  காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், வன்முறைகள் நிகழ்வதாக ராகுல் காந்தி கூறியது வேடிக்கையாக இருக்கிறது. 

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ராகுல் காந்திக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயாராக இருக்கிறோம். அவர் காஷ்மீரின் உண்மையான நிலைமைய அறிந்து கொண்டு அதன் பின்னர் கருத்து தெரிவிக்கலாம்” என்று கூறினார். 

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, உங்கள் அழைப்பை ஏற்று காஷ்மீர்  வரத் தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய  குழுவினருடன் நான் வருகிறேன். எங்களுக்கு விமானம் தேவையில்லை.  மக்களையும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் சந்திக்க சுதந்திரமும் கொடுத்தால் போதும்” என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் சத்யபால் மாலிக், ராகுல் காந்தி  காஷ்மீர்  வருவதற்கு நிபந்தனைகளை விதிப்பதாகவும் அவருக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெறுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று  கூறியிருப்பதாவது:- எனது டுவிட் பதிவுக்கு நீங்கள் அளித்த பதிலை பார்த்தேன். எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன். நான் எப்போது வரட்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story