கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை


கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2019 12:25 PM IST (Updated: 14 Aug 2019 12:25 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்

கேரளாவில் கடந்த 10 நாட்களில் பெய்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வயநாடு மாவட்டத்தில் புத்துமலை, மலப்புரம் மாவட்டத்தின் காவாலப்பாறா உள்ளிட்ட 80 இடங்களில் பெரியதும், சிறியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டது.  ஆயிரத்து 239 முகாம்களில், இரண்டு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 59 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. நேற்று மழை நின்றதால் நிவாரண முகாம்களில் இருந்தவர்கள், வீடுகளுக்கு திரும்பி அலங்கோலமாக கிடந்த  பொருட்களை சரி செய்தனர்.

மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் 11,159 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.

மலப்புரம் வய்நாடு பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரள முதல்வர் பிரனாய் விஜயன் பார்வையிட்டார்.

இதனிடையே கேரளாவின்-  மலப்புரம் கோழிகோடு  உள்பட ஐந்து  மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எனப்படும் அதிதீவிர மழை எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், அலபுழா மற்றும் இடுக்கி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் பல பள்ளிகள் நிவாரண மையங்களாக  மாற்றப்பட்டுள்ளன.

Next Story