தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது - பிரதமர் மோடி + "||" + In celebration of 75th Independence Day There should be no corruption in India-  PM Modi

75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது - பிரதமர் மோடி

75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது - பிரதமர் மோடி
75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி

டெல்லியில் நாட்டு மக்களுக்கு 73-வது சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி பிரதமர் மோடி உரை நிகழ்த்தினர் அவர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன, நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது .

ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது. உண்மையில் ஒன்றிணைந்த நாடாக இந்தியா உள்ளது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையும் இங்கு தேவை.

சுதந்திர நாடு என்பதன் அர்த்தம் மெல்ல மெல்ல அரசு அவர்கள் வாழ்விலிருந்து விலகுவதுதான். மக்கள் தங்கள் வாழ்வின் மீது அரசின் அழுத்தத்தை உணரக் கூடாது. ஆபத்து காலங்களில் அரசு விலகியிருக்கவும் கூடாது.

புதிய அரசு அமைந்த பிறகு மீண்டும் உங்கள் கௌரவத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தது. புதிய அரசு அமைத்து 10 வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் புதிய பலம் கிடைத்துள்ளது.

70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு 2 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி 3 டிரில்லியன் டாலர் ஆக்கியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் இலக்கை அடைந்தே தீருவோம்.

சர்வதேச சந்தைகளை இந்தியாவின் பொருட்கள் கைப்பற்ற வேண்டும். ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவில் இருந்து ஏதாவது ஒரு பொருள் விற்பனையாக வேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் போராடி வருகிறது. தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், தீவிரவாதத்திற்கு நிதி கொடுப்பவர்கள், அவர்களைத் தூண்டி விடுபவர்களை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தி வருகிறோம்.

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒரு தொடர் யுத்தத்தை நடத்தி வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. யுத்தத்தின் முறைகளும் மாறி வருகின்றன. முப்படைகளை ஒருங்கிணைத்து சீப் ஆப் டிபன்ஸ் ஸ்டாப் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வருவோம்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போன் , வாட்ஸ் ஆப் ,பேஸ்புக் போன்றவற்றை விரும்புகிறோம். இதனை ஏன் பொருளாதார மேன்மைக்கும் பயன்படுத்தக்கூடாது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துங்கள். பிளாஸ்டிக்கைப் போல் ரொக்கப் பரிமாற்றங்களுக்கு மறுப்பு தெரிவித்து டிஜிட்டல் பரிமாற்றங்களை வளரச்செய்யுங்கள்.

இந்தியாவின் 15 சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுங்கள். இந்தியாவைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்,வெளிநாட்டவர் இந்தியா பற்றி அறியச் செய்வோம். 100 புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குங்கள் அங்கு வாழ்வாதாரம் பெருகும்.

சந்திரயான் யாரும் போகாத இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. விளையாட்டுத் துறையிலும் இந்தியா சாதனைகளை குவித்து வருகிறது. 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில் உறுதியுடன் இருப்போம்.

ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  சாலை, ரயில் நிலையங்களை அரசு  நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது

370-வது பிரிவு நீக்கம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன, 370வது பிரிவை இத்தனை ஆண்டுகளாக நீக்காதது ஏன்? என எதிர்க்கட்சிகளை பார்த்து காஷ்மீர் மக்கள் கேட்கின்றனர்.

370, 35ஏ பிரிவினால் காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல தடைகள் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் கனவுகள் நசுக்கப்பட்டு வந்தன, காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமைகள் கிடைக்கவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி உள்ளேன், காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன

கடந்த 70 ஆண்டுகளாக 370-வது பிரிவு தீவிரவாதத்தை வளர்த்தது. ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமைகள் அங்கு கிடைக்கவில்லை.

இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டது, ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டு வர தாமதம் ஏன் என புரியவில்லை.

இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரிகள் முத்தலாக்கினால் வாழ்வை அச்சத்துடனேயே கடந்து வந்தனர்.

மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது என கூறினார்.