திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது - நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்


திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது - நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 16 Aug 2019 7:35 PM GMT (Updated: 16 Aug 2019 7:35 PM GMT)

திருப்பதியில் நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவையொட்டி விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ஸ்ரீவாரிமொட்டு, அலிபிரி நடைபாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இலவச தரிசன பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனத்துக்கு 5 மணி நேரமும், ‘டைம்ஸ்லாட்’ முறையில் தரிசனம் செய்தவர்களுக்கு 5 மணி நேரமும், திவ்ய தரிசன பக்தர்களுக்கு 6 மணி நேரமும் ஆனது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நேற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறை நாட்களான இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story