இன்று மாலைக்குள் காஷ்மீரில் மீண்டும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படும் - தலைமை செயலாளர் உறுதி


இன்று மாலைக்குள் காஷ்மீரில் மீண்டும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படும் - தலைமை செயலாளர் உறுதி
x
தினத்தந்தி 16 Aug 2019 10:45 PM GMT (Updated: 16 Aug 2019 9:36 PM GMT)

இன்று மாலைக்குள் காஷ்மீரில் மீண்டும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படும் என தலைமை செயலாளர் உறுதிபட கூறினார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் தொலைபேசி சேவைகள் மீண்டும் வழங்கப்படும் என மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியம் உறுதிபட கூறியுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 5-ந் தேதி முதல் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு, தொலை தொடர்பு சேவைகள் துண்டிப்பு என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 10 நாட்களுக்கும் மேலான நிலையில் அங்கு அமைதி திரும்பியதால், கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்தது. அதன்படி ஜம்மு பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக காஷ்மீர் பகுதியிலும் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக காஷ்மீர் மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீரின் மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 12-ல் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. அதில் வெறும் 5 மாவட்டங்களில் மட்டுமே இரவு நேர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இன்றைய (நேற்று) வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பின் உடனடியாக கிடைத்த தகவல்கள் படி, மாநிலம் முழுவதும் அமைதி நிலவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

எனவே மாநிலத்தில் அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அங்கு ஒவ்வொரு பகுதியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அடுத்த சில நாட்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் முற்றிலும் இயல்பு நிலை திரும்பி விடும். எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் குறிப்பிட்ட பகுதியின் களநிலவரங்களை பொறுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதைப்போல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது. அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் அடுத்த வாரம் முதல் பகுதி வாரியாக பள்ளிகள் திறக்கப்படும். இதனால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாது.

காஷ்மீரில் தொலைதொடர்பு சேவைகளை சீரமைப்பதுதான் மிகப்பெரிய சவால். ஏனெனில் செல்போன் இணைப்புகளை பயன்படுத்தி பயங்கரவாத செயல்களுக்கு தீவிரவாத அமைப்புகள் திட்டமிடுகின்றன. எனவே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனே இந்த இணைப்புகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனினும் இன்று (நேற்று) இரவு மற்றும் நாளையில் (இன்று) இருந்து தொலைபேசி இணைப்புகள் படிப்படியாக வழங்கப்படும். குறிப்பாக ஸ்ரீநகரில் ஏராளமான இணைப்புகள் செயல்பாட்டில் வந்திருப்பதை நாளை காலையில் நீங்கள் பார்க்கலாம். மொத்தத்தில் இன்று மாலைக்குள் பெரும்பாலான இணைப்புகள் செயல்பாட்டில் வரும்.

தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் விவகாரத்தில், அரசு அவ்வப்போது மறு ஆய்வு கூட்டங்களை நடத்தி ஆலோசித்து வருகிறது. அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுகிறது. இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.


Next Story