ஜம்மு காஷ்மீர் காங்.தலைவர் கைது : ராகுல் காந்தி கண்டனம்


ஜம்மு காஷ்மீர் காங்.தலைவர் கைது : ராகுல் காந்தி கண்டனம்
x
தினத்தந்தி 17 Aug 2019 8:21 AM GMT (Updated: 17 Aug 2019 8:21 AM GMT)

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அங்கு அசம்பாவிதம் எதுவும்  நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னாள் முதல் மந்திரிகளான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது  படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவர் குலாம் அகமது மிர் மற்றும் செய்தி தொடர்பாளர் ரவிந்தர் சர்மா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது தொடர்பாக ஊடக சந்திப்புக்கு  திட்டமிட்டு இருந்த சர்மாவை, வீட்டுக்காவலில்  வைத்திருப்பதாக காங்கிரஸ் கூறியது. ஆனால், காவல்துறை கட்டுப்பாடிலேயே காங்கிரஸ் தலைவர்கள் எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. 

இந்த  சூழலில், ராகுல் காந்தி அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எப்போது இதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story