குஜராத்தில் உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா


குஜராத்தில் உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா
x
தினத்தந்தி 18 Aug 2019 8:54 PM GMT (Updated: 18 Aug 2019 8:54 PM GMT)

குஜராத்தில் உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

வதோதரா,

நாடு விடுதலை அடைந்தபோது, பிரிந்து கிடந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது நினைவாக, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், சர்தார் சரோவர் அணை அருகே 182 மீட்டர் உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் உயரமான சிலை என்ற பெருமையை பட்டேல் சிலை பெறுகிறது. இது ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படுகிறது. இந்த சிலை அருகே உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா ஒன்றை அமைக்க குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி கூடுதல் தலைமைச் செயலாளரும், சர்தார் சரோவர் நர்மதா நிகம் லிமிடெட்டின் தலைமை இயக்குனருமான ராஜீவ் குப்தா கூறுகையில், “ஒற்றுமைக்கான சிலை அருகே சுற்றுலா பயணிகளை கவருகிற வகையில் தேவையான வசதிகளும், உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்காவும் உருவாக்கப்படும். இந்த உயிரியல் பூங்கா 1,300 ஏக்கர் பரப்பளவில் அமையும். 12 வகையான மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள், காண்டா மிருகங்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் இடம் பெறும். இந்த பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விருப்பத்துக்கு இணங்க சர்தார் வல்லபாய் பட்டேல் உயிரியல் பூங்கா அமைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

இதுவரை சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை 19 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story