இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் - அவசர சட்டம் கொண்டு வரவும் திட்டம்


இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் - அவசர சட்டம் கொண்டு வரவும் திட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2019 9:40 PM GMT (Updated: 18 Aug 2019 9:40 PM GMT)

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான அவசர சட்டம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகள், நிகோட்டின் சுவையுடன் கூடிய குக்கா உள்ளிட்ட மாற்று புகை பொருட்களுக்கு தடை விதிக்க முந்தைய பா.ஜனதா அரசில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இந்த பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு மாநில போதைப்பொருள் தடுப்புத்துறைக்கு மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்புத்துறை கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியது.

ஆனால் இந்த பொருட்கள் போதைப்பொருள் இல்லை எனக்கூறி மத்திய அரசின் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது வருகிற 22-ந்தேதி விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் மேற்படி பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அனைத்து வழிகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அரசின் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கவில்லை என்றால், மேற்படி பொருட்களுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story