கர்நாடகாவில் மந்திரிசபை விரிவாக்கம்; 17 எம்.எல்.ஏ.க்கள் பெயருடன் ஆளுநருக்கு எடியூரப்பா கடிதம்


கர்நாடகாவில் மந்திரிசபை விரிவாக்கம்; 17 எம்.எல்.ஏ.க்கள் பெயருடன் ஆளுநருக்கு எடியூரப்பா கடிதம்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:41 AM GMT (Updated: 20 Aug 2019 4:41 AM GMT)

கர்நாடகாவில் மந்திரிசபை விரிவாக்கத்திற்காக 17 எம்.எல்.ஏ.க்களின் பெயருடன் ஆளுநருக்கு முதல் மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது.  அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 26ந்தேதி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

காஷ்மீர் விவகாரம், கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளி போனது. இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க எடியூரப்பா கடந்த வாரம் டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதித்தனர்.

மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அமித்ஷா அனுமதி வழங்கினார்.  இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெறும் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். எடியூரப்பா பதவி ஏற்று 25 நாட்களுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் நடக்கிறது.

இதன்படி முதல்கட்டமாக 17 பேர் மந்திரிசபையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.  இதற்காக 17 எம்.எல்.ஏ.க்களின் பெயருடன் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு முதல் மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

Next Story