தேசிய செய்திகள்

வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு + "||" + Malayalam Actress Manju Warrier Stuck in Himachal Pradesh with Film Crew Due to Flood

வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு

வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு
வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் உள்பட மலையாள படக்குழுவினர் 30 பேர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம்,

இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா போன்ற வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இமாசல பிரதேசத்தில் மழைக்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.


இந்தநிலையில் மலையாள பட இயக்குனர் சணல் குமார் சசிதரன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இமாசல பிரதேசம் மணாலியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சத்ரா என்ற அழகிய குக்கிராமத்தில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது.

இதற்காக நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் 30 பேர் அங்கு முகாமிட்டிருந்தனர். சில தினங்களாக பெய்த கனமழையால் அந்த கிராமத்துடனான சாலை நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டது. மேலும் தொலை தொடர்பு வசதியும் செயலிழந்தது.

இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது சகோதரர் மது வாரியரை ‘சேட்டிலைட் போன்’ மூலம் தொடர்பு கொண்டு பேசியதால், அவர்கள் அங்கு சிக்கித்தவிப்பது தெரியவந்துள்ளது.

மஞ்சு வாரியர் பேசும்போது, “கடும் மழையால் அந்த கிராமத்தில் படக்குழுவினர் 30 பேர் உள்பட 200 பேர் சிக்கித் தவிக்கிறோம். கையில் இருக்கும் உணவை வைத்து இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே சமாளிக்க முடியும். இந்த போனில் கூட சிறிது நேரம்தான் பேச முடியும். இங்கிருந்து வெளியேற தங்களுக்கு உதவ வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டதாக மது வாரியர் கூறினார்.

அவர்களுக்கு உடனடியாக உணவு வழங்க வேண்டும், தேவையான உதவிகளை மத்திய மற்றும் இமாசல பிரதேச அரசு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவு துறை இணை மந்திரி வி.முரளதரனிடம் கேட்டு கொண்டதாக மது வாரியர் தெரிவித்தார்.

மேலும் மஞ்சு வாரியரின் முன்னாள் கணவரான நடிகர் திலீப்பும் எர்ணாகுளம் எம்.பி. ஹிபி ஈடனை தொடர்பு கொண்டு, உடனடியாக மஞ்சு வாரியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அவரை மீட்பதற்கான நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியது. மீட்பு படையினரால் நேற்று மாலை மஞ்சு வாரியர் உள்பட அந்த பகுதியில் சிக்கித் தவித்த அனைவரும் மீட்கப்பட்டதாக இமாசல பிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார்.